திரிகால ஞானேசம் அனைய சூழலின் குணாதுமுக் காலமும் அறிவான் முனிவர் சிற்சிலர் எய்திமுன் இலிங்கம்ஒன் றிருத்தி இனிய பூசனை இயற்றிட அவர்க்கது ஈந்தார் கனியும் அன்பருக் கருளும்முக் காலஞா னேசம். 21 | அத்தகைய வரைப்பினுக்குக் கிழக்கின் கண்ணது முக்காலங்களையும் அறியும் அறிவு பெறற் பொருட்டு முனிவரர் சிலர் அடைந்து சிவலிங்கம் நிறுவி இனிய சிவபூசனையைப்புரிய அவர் தமக்கு முக்கால உணர்வை ஈந்த பிரானார் பழுத்த அன்பினர்க்கு அருளுதல் புரியும் திரிகால ஞானேசம். மதங்கேசம், அபிராமேசம் விதந்த மற்றிதன் வடக்கது வெம்புலன் அடங்க மதங்க மாமுனி அருச்சனை புரிமதங் கேசம் அதன்கு டக்கபி ராமேசம் அச்சுதன் குறளாய்ச் சிதைந்து மாவலி தபத்தெற வழுத்திய வரைப்பு. 22 | எடுத்தோதிய இம்முக்கால ஞானேசத்தினுக்கு வடக்கில் உள்ளது கொடிய ஐம்புலன்களுமடங்க மதங்கமாமுனிவர் வழிபாடு செய்த மதங்கேசம்; அதற்கு மேற்கில் திருமால் வாமனவடிவினனாய் மாவலி சிதைந்துகெடும்படி அழிக்கத் துதிசெய்த தலம் அபிராமேசம் உள்ளது. வெம்மை-விருப்பமும் ஆம். அச்சுதன்-அழியாதவன்; திருமால். காயாரோகணப் படலம் காண்க. அபிராமேசப் படலம் பின்வரும். ஐராவதேசம் அத்த ளிக்குட பாலதன் றிமையவர் கடைபோ தத்தி மேலெழும் வெண்கரி அருச்சனை ஆற்றி அத்தி கட்கர சாகிவிண் அரசினைத் தாங்க அத்த னார்அருள் பெறும்அயி ராவதேச் சரமால். 23 | தேவர்கள் திருப்பாற் கடலைக்கடைந்த அந்நாளில் அக்கடலில் தோன்றிய ஐராவதம் எனப்பெறும் வெள்ளையானை அருச்சனை செய்து யானைகளுக்கு எல்லாம் அரசு என்னும் தெய்வத்தன்மை பெற்று இந்திரன் ஊர்தியாகச் சிவபிரானை அருச்சித் தருள் பெறும் ஐராவதேசம் அபிராமேசத்திற்கு மேற்குத்திசையில் உள்ளது. அத்தி முன்னதுகடல்; பின்னது யானை. இவைகளின் பெருமை துவற்று தேத்துளி துறுமலர்ப் பொதும்பர்சூழ் கிடந்த இவற்றுள் ஒன்றனில் எந்தைதாள் வழிபடப் பெற்றோர் கவற்றும் வல்வினைப் பிறவிவித் தாயகா மாதி அவற்றின் நீங்குபு மழுவலான் அடியிணை சேர்வார். 24 | |