வளமமைந்த தீர்த்தத்தில் ஞாயிற்றுக்கிழமை மூழ்குவராயின் மகப்பேறிலார் தடை நீங்கி மகப்பெறுவர். திருமண நிகழ்ச்சிக்குப் பகையாவன நீங்கி வாழ்க்கைத் துணைவியை எய்துவன்; அற்பாயுள் உடையவர் தீர்த்தப் பயனால் நீடிய வாழ்நாளை அடைவர். கல்வியில்லவன் நற்கல்வியைப் பெறுவன்; பிறவிக்குருடர் பிழை தவிர்ந்து கண்ணுடையராவர். வறுமை நீங்கிப் பெருநிதி பெறுவன் வறிஞன். அரசிழந்தவன் அரசு பெறுவன் என்க. அரி-சூரியன். அவனுக்கு உரிய நாள் ஞாயிற்றுக்கிழமை. அலகை பூதம தாதி பற்றி அலைக்க நின்றவர் இரவிநாள் குலவும் அத்தடம் ஆடின் அங்கவை கோடி யோசனை பின்னிடும் கலிகெ ழுந்துயர் குட்ட வெம்பிணி முயல கன்பெரு நோயெலாம் விலகி நீங்கும் அந் நீர்ப டிந்திடும் அக்க ணத்திது மெய்மையே. 11 | பேய், பூத முதலிய பற்றி வருத்த வருந்தியோர் ஞாயிற்றுக்கிழமையில் விளங்குகின்ற இட்டசித்தித் தீர்த்தத்திற்படிந்தால் அவைமெலிந்து புறங் காட்டிக் கோடி யோசனைக்கப்பாலோடும். அதுவரை வருத்திய பெருந்துன்பம் செய் குட்டநோய், முயலகன் முதலிய கொடு நோய்களும் மூழ்கினோரை அக்கணமே விட்டுப் போயகலும்; இவை சத்தியமேயாகும். பேய் முதலிய: ‘‘பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ள நினை, வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும், வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர், தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே’’ (திருஞா. வெண்காடு-2) என்னும் திருமொழி காண்க. காத ளாவிய குழைகி ழித்துவி டங்க னிந்து குமிழ்ம்மிசை மோது மையரி வாள்த டங்கண் முகிழ்த்த கொங்கை நுணங்கிடை மாத ராயினும் மைந்த ராயினும் வந்து பூம்புனல் ஆடினோர் யாதி யாது விரும்பி னாலும் அவ் விட்ட சித்தி அளிக்குமால். 12 | காதில் மருவிய தோட்டினைத் தகர்த்து விடத்தன்மை முதிர்ந்து குமிழம் பூப்போலு மூக்கிடை மோதி மையொடும் செவ்வரி பரவி ஒளியுடைய அகன்ற கண்களும், அரும்பிய கொங்கைகளும், நுண்ணிய இடையும் ஆகிய இவற்றையுடைய மாதரேயாக மைந்தரேயாக வந்து தீர்த்தத்தில் மூழ்கினோர் எவ்வெவை விரும்பினும் அவ் விட்ட சித்தித் தீர்த்தம் அவர்க்கு அவ்வவற்றை நல்கும் நலத்தவாம். முந்து கந்தனில் வாணி தன்னொடு முளரி மெல்லணை நான்முகன் வந்து மேதகும் இட்ட சித்தி மலர்த்த டந்தனில் ஆடிநன் றுந்து சத்திய லோக வாழ்க்கை படைத்தி டுந்தொழி லோடுற இந்து சேகரன் அருள்கி டைத்தனன் எறுழ்வ லித்தவ முனிவனே. | |