திருமால் ஆமையாய் வழிபட்டது முன்னொரு பிரமகற் பத்திடை நாரணன் மூரிநீர் மன்னுமந் தரமலை யாமையாய்த் தாங்கிவார் கடல்கடைந் தின்னமு தஞ்சுரர்க் கீந்தபின் வெஞ்செருக் கெய்திஆங் கன்னமுந் நீர்முழு துழக்கினான் உலகெலாம் அஞ்சவே. 5 | முன்னொரு பிரமகற்பத்தில் திருமால் பெருங்கடலில் மத்தாக மன்னும் மந்தர மலையை ஆமை வடிவு கொண்டு தாங்கித் திருப்பாற்கடலைக் கடைந்து இனிய அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய பின்பு கொடிய செருக்கடைந்து உலக முழுதும் அஞ்சும்படி அக்கடல் முழுதும் திரிந்து கலக்கினான். அச்சம்நீத் தாருயிர் உய்வகை அருள்சுரந் தாங்குறீஇக் கச்சபத் தின்னுயிர் செற்றதன் ஓட்டினைக் கதுமென நச்சிய வெண்டலை மாலிகை நடுவுறக் கொண்டனன் பச்சிளங் கிள்ளைபால் வீற்றிருந் தருளிய பண்ணவன். 6 | பசிய இளங்கிளி போலும் உமையம்மையாரைப் பாகங் கொண்ட பரமன் அச்சம் நீங்கி உயிர்த்தொகைகள் உய்யும்படி கருணை மீக்கூர்ந்து அவ்விடத்திற்குப் போய் ஆமையின் இனிய உயிரை விரையப் போக்கி அதன் ஓட்டினை விரும்பிய வெண்டலை மாலை நடுவிற் பொருந்தக் கொண்டனன். இப்பெரும் பிழைதவிர்ந் துய்யுமா நாரணன் எம்பிரான் வைப்பெனுங் காஞ்சியிற் சோதிலிங் கத்தினை வழிபடூஉ மெய்ப்படும் அன்பினால் இரந்திரந் தேத்தலும் விடைமிசைத் துப்புறழ் செஞ்சடைத் தோன்றல்அங் கவன்எதிர் தோன்றினான். | இப்பெருங்குற்றம் நீங்கிப் பிழைக்கும்படி திருமால் எமது பெருமானுக் குரிய தலமெனும் காஞ்சியிற் சோதிலிங்கத்தினை வழிபாடு செய்து உண்மையன்பினால் பல்கால் குறையிரந்து துதிசெய்யும்போது இடப வாகனத்தின்மேல் பவளத்தொடு மாறுபடும் சிவந்த சடையுடை அண்ணல் அத்திருமால் முன் தோன்றினார். அமுதம் தந்து செருக்கி அழிவுசெய்தல் பெரும் பிழை என்றனர். காண்டலுங் கண்கள்நீர் வார்தரக் கரையறு காதலின் பூண்டபே ரன்பினால் வீழ்ந்துவீழ்ந் திறைஞ்சினன் போற்றினான் ஆண்டகாய் ஆருயிர்த் தலைவனே அங்கணா அடியனேன் வேண்டுவ யாவையும் தந்தருள் என்றெதிர் வேண்டினான். 8 | கண்ட அளவிலே கண்களில் நீர் கரை புரண்டொழுக எல்லை கடந்த விருப்பிற்றாங்கிய பேரன்பினால் பல்கால் வீழ்ந்திறைஞ்சிப்போற்றி அனைத்துயிர்களையும் ஆளும் திறத்தினன் ஆகலின் ஆண்டகையே! ஆருயிர்த்தலைவனே! அங்கணனே! அடியனேன் விரும்புவன யாவும் தந்தருள் செய்க’ என வேண்டினான். |