276காஞ்சிப் புராணம்


     திருவருள் பெற்றவர்க்கு நேரே தலைவனாகலின், ‘ஆருயிர்த்
தலைவனே’ எனவும், பிழையைக் களைந்து ஆமை ஓட்டை மார்பிடை
யணிந்தமையால் கண்ணோட்டமுடையவன் என்பார் அங்கணா! எனவும்
கூறினர்.

மழுவலான் இணையடிப் பொதுவறு பத்தியும் மால்பதத்
தழிவிலா இறைமையும் அவ்விலிங் கந்தனக் கன்றுதொட்
டொழிவருங் கச்சபே சத்திரு நாமமும் உம்பரார்
தொழுதெழ ஆங்கரன் உமையொடும் இனிதமர் தோற்றமும்.  9

     மற்றைத் தேவரைக் கனவிலும் மதியாத மழுவேந்தியின் திருவடித்
தாமரைகளிலே பதிந்த பேரன்பும் வைகுந்தப் பதவியில் இடையில் அழியாத
தலைமையும் அச்சோதிலிங்கந் தனக்கு அன்று முதல் என்றும் கச்சபேசத்
திருப்பெயரும் விண்ணோர் தொழுதுயர்வுற அவ்விடத்தில் அரன் உமை
யம்மை யொடும் இனிது வீற்றிருக்கும் வெளிப்பாடும்.

     கச்சபம்-ஆமை. கச்சப+ஈசர்=கச்சபேசர்.

அத்தலந் திகழ்அவி முத்தமாந் தலத்தினும் அதிகமா
வைத்திடுந் தலைமையும் வரமெனக் கொண்டனன் வள்ளலும்
சித்தம்நீ டுவகையின் அங்கவை முழுவதுந் தேத்துழாய்ப்
பத்தனுக் கருள்புரிந் தாயிடை மறைந்தனன் பரையொடும்.   10

     அத்தலம் விளங்குகின்ற காசியினும் மேன்மையதாக வைத்திடுந்
தலைமைப்பாடும் ஆகிய இவ்வரங்களை வேண்டினன். வள்ளலும் திருவுள்ளம்
மகிழ்ந்து தேன் சிந்துகின்ற துழாய் மாலையை அணிந்த அன்பராகிய
திருமாலுக்கு அவை முற்றும் அருள் செய்து உமாதேவியாரோடும் ஆங்கு
மறைந்தருளினர்.

அன்றுதொட் டென்றும் அக் காஞ்சியின் நீங்கலா தமர்ந்திடுங்
கொன்றைவார் சடையனைக் கச்சபே சன்றனைக் கும்பிடச்
சென்றவர் கண்டவர் கருதினர் யாவருந் தீதுதீர்ந்
தொன்றிஒன் றாநிலை மாறிலா முத்திபெற் றுய்வரே.       11

     அன்று முதல் என்றும் அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் கொன்றை
மலர் மாலையை அணிந்த சடையுடைப் பெருமானைக் கச்சபேசப்
பெருமானைத் தொழச் சென்றவரும், தரிசித்தோரும், எண்ணினோரும்
யாவரும் மலம் நீங்கி ஒன்றியும் ஒன்றாத நிலையாகிய ஒப்பில்லாத
முத்தியைப் பெற்றுய்வர்.

     ஒன்றியும் ஒன்றா நிலை-உடனாய் நிற்றல். ஏனைய பத முத்தியின்
நீங்கிய முத்தி-மாறிலா முத்தி.

துர்க்கை முதலியோர் வழிபாடு

துர்க்கையுஞ் சாத்தனும் இரவியும் வயிரவத் தோன்றலும்
நற்கரி முகனுடன் ஐவருங் கச்சப நாயகன்
பொற்கம லப்பதம் பூசனை யாற்றிஅங் குடன்அமர்ந்
தொற்கமில் கணங்களோ டப்புரிக் காவல்பூண் டுறுவரால்.    12