இன்பத்தில் திளைத்து இளவேனிற் பருவத்துக் கூவும் மாமரத்திலுள்ள குயில்கள் ஒலிக்கின்ற கார் காலம் வரும் அளவில் வாயடைத்துக் கூவாதிருத்தற்குக் காரணம் தனிமை கொண்ட தலைவியர் கார்ப்பருவத் தொடும் சேணிடைச் சென்ற தலைவருடைய தேர் புகுதலான் வெற்றியைப் பாராட்டும் வளமொழிக்குத் தோல்வியுறுதலானே. எனவே, தனிமை கொண்ட தலைவி வாயடைத்திருந்தமை பெறுதும். தொண்டை மான்கடக் களிற்றினை முல்லையால் தொடக்கி அண்டர் தம்பிரான் வெளிப்படக் காட்சிதந் தருள்சீர் கொண்ட வான்பதி முதல்பல தன்னிடைக் குலவக் கண்டமுல்லையின் பெருமையார் கட்டுரைத் திடுவார். 63 | தொண்டைமான் எனும் அரசனுடைய மதயானையை முல்லைக் கொடியால் யாத்துத் தேவர் முதல்வன் வெளிப்படக் காண எழுந்தருளி அருளும் சிறப்பினையுடைய திருமுல்லை வாயில் முதலான பல சிவதலங்கள் தன்னிடை விளங்க அமைந்த முல்லையின் பெருமையை யாவர் உறுதிபடச் சொல்ல வல்லவர். மருதம் பொலஞ்சி றைச்சுரும் புளர்தரு குறுஞ்சுனைப் புறவ நிலந்த னைப்புடை யுடுத்தது நெட்டிள வாளை இலஞ்சி நின்றுமீப் பாய்ந்துவெண் மதிகிழித் தேகித் தலங்கொள் வானியாற் றுலவுபூந் தடம்பணை மருதம். 64 | பொன்னிறச் சிறகையுடைய வண்டு சுழல்கின்ற குறுஞ்சுனைகளையுடைய முல்லை நிலத்தை அடுத்துச் சூழ்ந்தது, நீண்ட இளவாளைமீன் நீர் நிலையினின்றும் மேற்றாவித் திங்களை யூடறுத்துப் போய் வானகங்கையில் உலவும் அகன்ற வயல்களையுடையது மருதம். ஒருவ னாகிய சிவபிரான் உலகுயி ரளிப்பக் கருணை கூர்ந்துமுன் நவந்தரு பேதமுங் காட்டுந் திருநி கர்ப்பஓர் பாலியே வயல்வளஞ் செழிப்பப் பெருகு தண்புனல் பற்பல கால்களாய்ப் பிரியும். 65 | ஒருவனாகிய சிவபெருமானே உலகிலுள்ள உயிர்களைக் காத்தளிப்பக் கருணை மேலிட்டுப் பழமையான ஒன்பது வகைப்பட்ட சிவபேதங்களையும் மேற்கொள்ளும் சிறப்பினை ஒப்ப, ஒன்றாகிய பாலியே, வயலின் வருவளங்கள் தழைப்பப் பெருகுநீர் கொண்ட பல கால்களாய்ப் பிரிந்து போம். நவந்தரு பேதங்கள்: சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், திருமால், பிரமன் என்பன. ‘சிவஞ் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன், உவந்தருளுருத்திரன் றான் மாலயன் ஒன்றி னொன்றாப், பவந்தரும் அருவநாலிங் குருவநா லுபய மொன்றா நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்.’ (சித்தி. சூ. 2-74.) |