மாத்திரைச் சுருக்கம் விடியற் காலத்தோர் மாத்திரை வீந்ததும் மடியும் நஞ்சொன்று மாய்ந்ததும் ஒன்றுமாய் கடிகொள் அந்தியிற் கானவர் தங்களொன் றொடியு நீளறை யார்ப்பொ டுலம்புமால். 14 | ஒரு பொருள் பயக்கும் ஒரு சொல் ஒரு மாத்திரையைக் குறைப்ப வேறு பொருள் பயக்கும் சொல்லாய் வருவது மாத்திரைச் சுருக்கம். விடியற்காலத்து-விடியலாகிய காலத்தில் (விடியல்-காலை) ஓர் மாத்திரை வீந்தது உம்-ஒரு மாத்திரையைச் சுருக்கக் கலையென்றாயிற்று, கலை-கலைமான், ஒலியும், மடியும் நஞ்சு-மடியச் செய்யும் தன்மையையுடைய நஞ்சு, (நஞ்சு-காரி,) ஒன்று மாய்ந்தது உம்-ஒரு மாத்திரையைக் சுருக்கக் கரி என்றாயிற்று, கரி-யானை யொலியும், ஒன்று மாய் கடிகொள் அந்தியில்-ஒரு மாத்திரை குறைந்த அச்சத்தைத் தராநின்ற மாலையில் (அந்தி-மாலை). ஒரு மாத்திரை குறைந்த மாலை என்றமையால் மலை யென்றாயிற்று). அம் மலையில் வசிக்கும், கானவர் தங்கள் ஒன்று ஒடியும் நீள் அறை-குறவர்களது ஒரு மாத்திரை குறைந்த நீண்ட பாறையினது (அறை-பாறை) (ஒரு மாத்திரை குறைந்த பாறை யென்றமையால் பறை யென்றாயிற்று) பறை-பறையினது, ஆர்ப்பொடு உலம்பும்-சத்தத்தோடு கூடி ஒலிக்கும். கலைமான், யானை இவற்றில் ஒலியுடன் குறிஞ்சி நிலப் பறையும் ஒலிக்கும், விடியல் காலம் இனஞ் சுட்டிய இருபெயரொட்டுப் பண்புத் தொகை. விடியல் சூரியோதயத்தின் முன்னர்த்தாகிய சிறு பொழுது, ஈண்டு விடியலைக் காலை என்றது பொதுப்பட வழக்குப் பற்றி யென்க. மடியும், பிறவினை விகுதி தொக்கு நின்ற பெயரெச்சம். மாத்திரை வருத்தனை அளபொன் றேறிய வண்டதி ரார்ப்பினால் அளபொன் றேறிய மண்ணதிர்ந் துக்கன அளபொன் றேறிய பாட்டல ரீர்ஞ்சுனை அளபொன் றேறழ கூடலைந் தாடுமால். 15 | ஒரு பொருள் பயக்கும் ஒரு சொல் ஒரு மாத்திரை பெற்று வேறு சொல்லாய்ப் பொருள் பயந்து நிற்பது மாத்திரை வருத்தனை. அளபு ஒன்று ஏறிய வண்டு-ஒரு மாத்திரை கூடிய வண்டு, (வண்டு- அளி) (அள பொன்றேறிய அளிபென்றமையால்) ஆளி-யாளி) என்னும் ஓர் மிருகம், அதிர் ஆர்ப்பினால்-ஒலிக்கும் முழக்கத்தால், (அளபு ஒன்றேறிய மண்-ஒரு மாத்திரை கூடிய மண் (மண்-தரை). அளபொன்றேறிய தரை யென்றமையால்) தாமரை-நட்சத்திரங்கள், அதிர்ந்து உக்கன-கம்பித் துதிர்ந்தன, அளபு ஒன்று ஏறிய பாட்டு-ஒரு மாத்திரை கூடிய பாட்டு, (பாட்டு-கவி), அளபொன்றேறிய கவியென்றமையால்) |