திருநாட்டுப்படலம் 29


பராரை மூலமேற் பணைகிளை வளாரெனைப் பலவும்
விராவி ஒன்றிலொன் றனந்தமாய்க் கவடுவிட் டென்னத்
தராத லம்புகும் பாலியிற் பிரிந்துதண் கரைக்கண்
அராவு கால்களும் அவைதரு கால்களும் அனந்தம்.    66

     பருத்த அடிமரமாகிய ஒரு முதலின் மேலே பெருங்கிளையும், கிளையும்,
வளாரும் ஏனைய பிறவுமாய்க் கலந்து ஒன்றிலிருந் தொன்றாய்க் கிளைத்துப்
பிரிந்தாற்போலத் தரையிடத்துப் புகுந்து செல்லும் பாலி நதியிற் பிரிந்து
தண்ணிய கரையைக் கரைக்கின்ற கால்களும், அவற்றினின்றும் பிரிகின்ற
கால்களும் அளவிறந்தன.

     பரு+அரை=பருவரை எனற்பாலது மரூஉ முடிபின் வந்தது.

நான்மு கப்பிரான் வேள்வியைத் தபவரு நதியை
மான்ம றுத்திடைக் குலையெனக் கிடந்தமை மான
மீன்மு கப்பெருங் காற்புனல் தட்பவீழ்ந் துழக்கும்
பான்மு லைக்கரு மேதியாற் பருமடை யுடையும்.      67

     பிரமன் செய்யும் வேள்வியை அழிக்க வந்த வேகவதி நதியைத்
திருமால் எதிருற்றுத் தடுத்துக் கரையாகக் கிடந்தமையை ஒப்ப, மீன்களைத்
தன்னிடங் கொண்ட பெரிய கால்வாய்களிலுள்ள நீரைத் தடைப் பட வீழ்ந்து
கலக்கும் பால்சுரக்கும் மடியினையுடைய கரிய எருமைகளால் பருத்த நீர்
மடைகள் உடைக்கப் பெறும்.

     பிரமன் செய் வேள்வியை சரசுவதி நதியுருவாய் அழிக்க முற்பட்ட
வரலாறு சிவாத்தானப் படலத்துள் காண்க.

பழங்கண் வேனிலைப் புயல்கொடு பாற்றுதன் இறைக்குத்
தழங்கும் ஓதையின் மருதம்வாழ்த் தெடுப்பது தகைய
வழங்கு தண்ணுமை ஓதையும் மள்ளரார்ப் பொலியும்
முழங்கும் தீம்புனற் சும்மையு முடுகிவிண் புகுமால்.    68

     வெம்மையால் துன்பம் செய் வேனிற் பருவத்தை மேகத்தால் மாற்றிக்
கார்ப் பருவம் ஆக்கி நீர் பெருகுவித்த இந்திரனாய தன் தலைவனுக்கு
மருதமக்கள் வாழ்த்துப் பாட்டொலியை ஒப்ப, மருதப்பறையின் பேரொலியும்,
உழவர் ஆரவாரப் பேரொலியும், நீர்ப்பெருக்கின் பெருமுழக்கும், விரைந்து
விண்ணிடம் நுழையும்.

பொறிகள் ஐந்தையும் புறஞ்செலா தடக்கிஓர் நெறிக்கே
குறிகொ ளும்படி செலுத்துபே ராளர்தங் கோள்போற்
பிறிவு றும்பல மடைகளிற் பிழைத்திடா தொதுக்கிச்
செறித ரும்புனல் முழுவதும் அகன்பணை செறிப்பார்.   69

     ஐம்பொறிகள் வழியே ஐம்புலன்களின் மேல் அறிவு செல்லாதவாறு
அதனைத் தடுத்து அருள் நெறியில் முதற் பொருளைப் பெறும்படி
செயற்படுத்தி இன்பத்தைத் தேக்குவார் பேராளர், அதுபோலப் பாலி நீர்
சிறிதும் வேறு பல வேண்டாத மடைகளிற் றப்பாத வாறு சிறை