சுரகரேசப் படலம் 293


     இத்தகைய வளங்கள் பலவும் உடைத்தாய் நிலைபெற்று மண்ணவரும்
விண்ணவரும் துதிக்க வாய்ப்புடைத்தாய்த் தேன் பொருந்திய மலர்களைக்
கொண்ட சோலைகள் சுற்றிச் சூழ்ந்து குளிர்ச்சி பொருந்திய மேகமாகிய
போர்வையைத் தன் வடிவிற் போர்த்துக் கொண்டு நெருங்கிய கிரணங்களை
யுடைய பல்வகை மணிகளையுடைய முடிமிசை ஆகாய கங்கை தலைப்
பாகையை ஒப்ப உயர்ந்து அழகிய புகழ் மிக்கு நிற்ப அரசு வீற்றிருக்கும்
பொலிவமைந்த மந்தர மலையில்,

குமார சம்பவம்

     ஆருயிர் யாவையும் உய்யு மாற்றால் அற்புத மேனி எடுத்து
நின்று, பேரருள் ஐந்தொழில் ஆட்டு கந்த பிஞ்ஞகன் கந்தனை நல்க
வேண்டிச், சீரிம யத்து மடப்பி டியைத் திருமணஞ் செய்தபின் எய்தி
அங்கண், ஏரியல் அந்தப் புரத்தின் மன்னி இன்பக் கலவி நடாத்த
லுற்றான்.                                              27

     அரிய உயிர்கள் அனைத்தையும் உய்யும் பொருட்டு ஞானத்திருவுருவந்
தாங்கி நின்று பேரருட்டிறத்தால் ஐந்தொழிலைப் புரிந்தருளும் பெருமான்
முருகப் பெருமானைத் தந்தருள விரும்பிச் சிறப்புப் பொருந்திய இமய
வல்லியைத் திருமணங்கொண்டு அம்மந்தர மலையை அடைந்து அழகு
திகழ்கின்ற அந்தப் புரத்திலிருந்து இன்பத்திற்குக் காரணமாகக் கூடி
யிருந்தனர்.

     வண்டிமிர் கூந்தல் இமய வல்லி வனமுலை தாக்க மகிழ்ந்து
புல்லிக், கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றுப் பன்னாட் கலவிப் பெரு
நலந் துய்க்குங் காலை, அண்டர் உணர்ந்து வெருவி அஞ்சி அம்பிகை
தன்பாற் கருப்ப வீறு, கொண்டிடு முன்னஞ் சிதைவு செய்யுங்
கொள்கையின் அங்கியை ஏவினார்கள்.                      28

     வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய இமய வல்லி அழகிய
கொங்கைகள், தீண்ட மகிழ்ந்து தழீஇக் கண்டும், கேட்டும், உண்டும்,
உயிர்த்தும், தீண்டியும் பல்காலம் கூடியிருந்துழித் தேவர் அறிந்து பேரச்ச
மெய்தி அம்மைபால் கருப்ப வளர்ச்சி அடையு முன்பே அதனை அழிக்கும்
முயற்சியில் அக்கினி தேவனை ஏவினார்கள்.

     ஏவலும் அங்கிமற் றங்கண் ஏகி எம்பெருமான்கோயில் வாயில்
முன்னர்த், தேவி உகைக்கும் மடங்கல் வைகுஞ் செய்கையை நோக்கி
நடுங்கி மீண்டு, மேவிய விண்ணோர் குழாத்தை நண்ணி வினவும்
அவர்க்கு விளைந்த தோதி, நீவிர்க ளேஅவண் எய்தி ஊறு
நிகழ்த்திடு மின்க ளெனக்க ரைந்தான்.                      29

     ஏவியதும் அக்கினி மந்தர மலையை எய்தி எம்முடைய பெருமான்
திருக்கோயிலின் வாயிலில் அம்மையார் செலுத்துகின்ற வாகனமாகிய
சிங்கத்தைக் கண்டு நடுங்கித் திரும்பி தேவர் கூட்டத்தை நெருங்கி
வினாவுகின்ற அவர்க்கு நிகழ்ந்தது கூறி நீவிர் அங்கெய்தி இடையூற்றை
நேரே செய்ம்மின்’ எனக்கூறினன்.