அரியய னாதி அமர ரெல்லாம் அம்மொழி கேட்டுள் அழுங்கி நொந்து, பெரிதுயர் மந்தரப் பாங்கர் எய்திப் பேணி நிலமிசை வீழ்ந்தி றைஞ்சி, உரிய முறையிற் பழிச்சி நின்றே ஓலிடும் மாற்றம் உணர்ந்து நம்மான், தெரிவையொ டாடும் புணர்ச்சி நாப்பண் சென்றனன் வெற்றரை யோடும் அங்கண். 30 திருமாலும் பிரமனும் முதலாய தேவர் யாவரும் அதனைக் கேட்டு மனம் பெரிதும் நொந்து மிகவும் உயர்வுடைய மந்தர மலையை அணுகிப் போற்றி நிலமுற வணங்கி விதிப்படி துதிசெய்து முறையிடும் குறையைத் திருச் செவி ஏற்ற பெருமான் உமையம்மை யொடும் கூடியிருந்த அந் நிலையே நிருவாணராய் அத்தேவர் முன் எழுந்தருளினார். கண்டனர் காமனைச் செற்ற கோவைக் கழிபெருங் காதல் கரை இ கப்பப், புண்டரி கக்கண் முகுந்தன் வாசப் பூந்தவி சாளி உருத்தி ரர்கள், அண்டர் மருத்துவர் சாத்தி யர்கள் அனைவரும் எல்லையில் அன்பு பொங்கிக், கொண்ட மயிர்ப்புள கங்கள் மல்கக் குவித்த கரத்தொடும் ஏத்த லுற்றார். 31 மன்மதனை நீற்றிய பெருமானை மிகப்பெரும் பேரன்பு கரை கடந்து செல்லக் கண்டு தரிசித்தனர். தாமரைக் கண்ணராகிய திருமாலும், வாச மலருறை பிரமனும், உருத்திரரும், தேவரும், மருத்துவரும், சாத்தியரும் ஆகிய யாவரும் அளவற்ற அன்பு பெருகி மயிர் கூச்செறிய அஞ்சலி முகிழ்த்த கையினராய்த் துதிக்க லுற்றனர். காமனை அழித்த கண்ணுதற் பெருமான் செய்கை, திருவிளையாட்டாகலான் தீங்கு நிகழா என்பார் இது கூறினர். வெள்விடை பூங்கொடி மீது வைத்து வென்றி மழுப்படை ஏந்தி வஞ்சக், கள்ளர் கருத்தின் அகப்ப டாத கண்ணுதற் சாமி நின் தாளி ணையில், அள்ளல் அளக்கர் அமிர்தந் தன்னாற் பூசனை யாற்றி அமிர்த ரானோம், எள்ளரு மாமலர் இட்டி றைஞ்சிச் சுமனரெனும் பெயர் எய்தி னேமால். 32 பொலிவமைந்த கொடியில் வெள்ளிய விடையை அமைத்து வென்றி பொருந்திய மழுவாயுதத்தைத் தரித்துக் கரவாடும் வன்னெஞ் சர்க் ககப்படாத நெற்றிக் கண்ணுடைய நிமலனே நின்னுடைய திருவடிகளில் திருப்பாற் கடலில் அள்ளிக் கொள்ளக் கிடைத்த அமிழ்தினாற் பூசனை செய்தமையால் அமிர்தர் எனப் பெற்றோம். மேலும், இகழ்தற் கரிய பெருமையுடைய மலர்களை இட்டு வணங்கிச் சுமனர் என்னும் பெயரையும் பெற்றவர் ஆயினோம். அள்ளல், சேறுமாம். சுமனசு-மலர், நன்மனம். |