அறுசீரடி யாசிரிய விருத்தம் தனக்கெனச் சிறிதும் வேண்டாத் தன்மையன் உயிர்கட்கென்றே நினைப்பரு நடனம் பூண்ட நின்மலன் அற்றேல் இந்தப் பனித்தமுத் துருக்கி யன்ன வெண்புனல் பருகு மின்கள் எனப்புகன் றருள வல்லே எரிஇறை அங்கை ஏற்றான். 36 | தனக்கென் றொன்றையும் விரும்பானாய் உயிர்களின் பொருட்டே நினைக்கவும் இயலாத திருக்கூத்தினை மேற்கொண்ட இயல்பாகவே பாசங்களின் நீ்ங்கியோன் ‘அத்தன்மைத் தாயின் குளிர்ந்த முகத்தினை உருக்கினா லொத்த இவ் வெள்ளிய புனலைப் பருகுமின்’ என்னக் கூறியருள அக்கினி தேவன் விரைந்து உள்ளங்கையில் ஏற்றனன். தனக்கோர் பயன் கருதாமை: ‘‘ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம், பாடும் மெனவும், புகழல்லது பாவ நீங்கக், கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக் கேட்டீராகில், நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்டலாமே’’ (திருஞா. திருப்பாசுரம்). என்னும் அருட்டிரு மொழியையும், ‘‘ஆடும் மெனவாந் திருப்பாட்டி னமைத்த மூன்றும், நீடும் புகழோ பிறர் துன்ப நீக்குதற்கோ வென்று, தேடும் முணர்வீ ருலகுக்கிவை செய்த தீசர், கூடுங் கருணைத்திற மென்றனர் கொள்கை மேலோர்.’ (திருத். திருஞா. 839) என்னும் திருவாக்குரையையும் காண்க. ‘அற்றேல்’, அம்மையார் திருவயிற்றில் கரு நீடாமையை. எண்ணரும் வருடங் காறும் ஆயிர இரவிப் பொற்பின் அண்ணல்பால் நின்று வீழும் அதனைஅவ் வனலோன் உண்ண விண்ணவர் எவர்க்கும் அந்நாள் மேவருங் கருப்பம் நீடத் துண்ணெனத் துளங்கி வெப்பு நோயினில் தொடக்குண் டார்கள். | எண்ணரிய வருட வரையிலும் ஆயிர சூரியர் ஒளியுடைத்தாய் இறைவனிடத்து நின்றும் வீழும் அவ்வீரியத்தை அவ்வக்கினி தேவன் பருகினமையால் தேவர் யாவர்க்கும் பொருந்துதல் வரும் கருப்பம் தங்கிக் காலம் நீட்டிக்க நடுக்குற்று வருந்திச் சுரநோயிற் பிணிப்புண்டனர். அக்கினி அவியைப் பெற்றுத் தேவர்க்கெல்லாம் ஆக்குவன்; அவ்வாறே ஈண்டும் பருகினமையால் தேவர்கள் கருவுற்றனர், இறைவன் வீரியம் தீயின் இயல்புடைமையானும், மேல் நோக்கும் தன்மையுடைமையானும் வன்னிரேதா, ஊர்த்துவரேதா என்னும் திருநாமங்கள் உடையர். சனற்குமாரப் படலம் 22- ஆம் செய்யுளைக் காண்க. மீளவும் இரந்து வேண்டும் விண்ணவர் குழாத்தை நோக்கி வாளெனப் பிறழ்ந்து நீண்டு மதர்த்தரி பரந்து கூற்றை ஆளெனக் கொண்டு மைதோய்ந் தகல்விழிச் சேனை வில்வேட் காளையை முனிந்த வீரன் கருணையால் விளம்ப லுற்றான். 38 | |