சுரகரேசப் படலம் 297


     பின்னரும் குறையிரந்து வேண்டும் தேவர் குழுவினை வாட்படையை
ஒப்பப் பிறழ்ந்து நீண்டு அமர்த்துச் செவ்வரி பரவி இயமனை அடிமை
கொண்டு மையில் தோய்ந்தகன்ற கண்களையுடைய மகளிராகிய படைத்
துணைவரைக் கொண்ட வில்லுடை வீரனாகிய மன்மதனை நுதற் கண்ணால்
நீற்றிய பெருமானார் கருணையொடும் நோக்கித் திருவாக்கருளினார்.

     ‘‘காமனைச் செற்ற கோ’’ என 31-ஆம். செய்யுனினும் காண்க.
‘‘நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றவன்’’ (தேவாரம்)

கராத்துயிர் பருகி வேழங் காத்தவன் முதலாய் நீவிர்
பராய்த்தொழுங் காஞ்சி வைப்பிற் பயில்சுர கரேச மென்னச்
சுராக்கனாம் அவுணன் ஆவி தொலையநாம் அமைத்த தானம்
இராக்கதிர் எறிக்கும் இந்து முடிநமக் கினிய சூழல்.      39

     முதலையைச் செகுத்துக் கசேந்திரனைக் காத்த திருமால் முதலாம்
நீவிர் துதித்து வணங்கும் காஞ்சிமா நகரில் பொருந்திய சுரகரேசம் என்னும்
திருப்பெயரில் சுராக்கன் என்னும் அசுரனை அழித்தற் கிடனாக யாம்
அமைத்த தலம் இரவில் நிலவொளி வீசும் சந்திரனை முடியிற்சூடிய
நமக்கினிய இருக்கை ஆகும்.

     ‘சுராக்கனை’ அழித்த வரலாற்றை (257-266 கச்சி. காஞ்சி) இருபத்
தெண்டளிப் படலம் காண்க,.

சுரகரே சத்தின் பாங்கர்ச் சுரகர தீர்த்தம் உண்டால்
விரவிநீர் படிந்தோர் பாவ வெப்புநோய் முழுதும் நீங்கும்
இரவிநாள் கழிய நன்றாம் நீர்அவண் எய்தி நம்மைப்
பரவிநீ ராடில் இந்த வெப்புநோய் பாறுங் காண்மின்.     40

     சுரகரேசத்தை அடுத்துச் சுரகர தீர்த்தம் உள்ளது. உள்ளங் கலந்து
அத்தீர்த்தத்தில் முழுகினோர் பாவமும், சுரநோயும் முற்றும் தவிர்ந்துவிடும்,
ஞாயிற்றுக்கிழமை மூழ்குதல் பெரிதும் நலத்ததாகும். நீவிர் அங்குச் சென்று
அத்தீர்த்தத்தில் நீராடிச் சுரகரேசத்தில் வழிபாடு செய்தால் இந்த வெப்பு
நோய் ஒழிந்துபோம் காண்மின்.

ஆயிடை நீங்கிப் பின்னர் மேருவை அணுகி அங்கண்
மேயஇக் கருப்பந் தன்னை விடுமின்என் றகன்று நீங்க
மாயனே முதலாம் விண்ணோர் மகிழ்ந்தெழும் உள்ளத் தோடுந்
தூயசீர்க் காஞ்சி எய்திச் சுரகரந் தன்னைக் கண்டார்.      41

     பின்னர் அவ்விடத்தை அகன்று மேரு மலையை அடுத்து
அவ்விடத்தில் மேவிய கருப்பத்தை உண்டுமின்’’ என்று அருள் செய்து
பெருமான் நீங்கத் திருமால் முதலாம் தேவர் மகிழ்ந்து ஊக்கமொடும் தூய
சிறப்பினையுடைய காஞ்சிமா நகரை அடைந்து அத்தலத்தைக்கண்டனர்.