பாயிரம் 3


வண்டினங்கள் ததைந்து மூசத், தேன்பிலிற்று நறுங்கடுக்கைத் தெரியலைப்பாம் பெனமருண்டத் தெரியல் நாறுங், கான்பிலிற்றத் தெருண்டணையுங் காமக்கோட் டத்துமையைக் கருத்துள் வைப்பாம்.  5

     மழுப்படையோன் போக வடிவினனாய்க் கொன்றை மலர்மாலையைத்
தரிப்பவும், காமக் கண்ணியம்மையார் வண்டுகள் செறிந்து மொய்க்கும்
அதனைப் பாம்பென முன்னர் மருண்டு நறுமணத்தால் மாலையெனப் பின்
தெளிந்து பிரானை அணையும் அவ்வம்மையை நினைவில் நிறுத்துவாம்.

     பிலிற்றுதல்-சிந்துதல். தகைந்து- நெருங்கி. மூச-மொய்ப்ப. கடுக்கை-
கொன்றை.

     கருக்காமக் கோட்டிமிர வினையனைத்தும் ஒருங்கெய்திக் கலகஞ்
செய்யுந், தருக்காமக் கோட்டியெலாம் அறஎறிந்தாம் இனிஎன்றும்
தகைசால் அன்பு, சுருக்காமக் கோட்டினைச்சே யரைகரங்கொண்
டார்க்குமுலைச் சுவடு நல்குந், திருக்காமக் கோட்டியம்மை
சேவடிப்போ தெப்போதுஞ் சிந்திப் பாமால்.                   6

     பிறவியைத் தரவருகின்ற அவா வென்னும் தீமையைத் தோற்றுவிக்கின்ற
இருள்மலங் காரணமாகக் கூடுகின்ற இருவகை வினைகள் முற்றும் ஒருங்கு
கூடிச் செருக்குவன ஆகும். அக்கூட்டத்தை முற்றவும் களைந்தனம்,
பேரன்பினை மேலும் பெருக்குவோம். பிரமன் சிரத்தினைக் கரத்தினும்,
சங்குமணியை இடையினும் தரித்த பெருமானுக்குத் தனச்சுவட்டினைப் பதித்த
காமக் கோட்டியம்மையார் திருவடி மலர்களை நனவினும் கனவினும்
சிந்திப்போமாக!

     கரு-பிறவி. திமிரம்-இருள் (ஆவணம்). கோட்டி-கூட்டம்.

விகடசக்கர விநாயகக் கடவுள்

     விழிமலர்ப்பூ சனைஉஞற்றித் திருநெடுமால் பெறுமாழி மீளவாங்கி,
வழியொழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி முடைநாற்றம் மாறு
மாற்றால், பொழிமதநீர் விரையேற்றி விகடநடப் பூசைகொண்டு புதிதா
நல்கிப், பழிதபுதன் தாதையினும் புகழ்படைத்த மதமாவைப் பணிதல்
செய்வாம்.                                              7

     திருமால் சிவபூசையில் கண்மலரைச் சாத்திப்பெற்ற சக்கரத்தை விநாயகர்
ஓர்வழியாற்கொண்டு அறவழி ஒழுகாத சலந்தரனைத் தடிந்த முடைநாற்றம்
நீங்க மதநீரால் மணம் ஏற்றி விகடநடப் பூசை கொண்டு புதிதாக்கித் தந்து
பழியைநீக்குகின்ற தன்தாதையினும் புகழ்படைத்த அவ்விநாயகரை
வணங்குவாம்.