300காஞ்சிப் புராணம்


     தந்தையும் தாயும் சென்று தம் மகனைக்கொண்டு தம் தவச்சாலையை
அடைந்த பொழுது சிறுவர் அப்பாலை விரும்பித் தாயைப் பணிந்து வேண்ட
குற்றமற்ற நெல்லரிசியால் ஆக்கிய மாவை அப்பொழுது நீரிற்கரைத்திதனைக்
கொள்ளுதி என்று கொடுத்தனர் தாயார்.

ஏற்றனன் பருகித் தீம்பால் அன்றிது புனல்என் றோச்சி
மாற்றினன் மாது லன்றன் மனைவயின் பருகுந் தீம்பால்
ஆற்றவும் நினைந்து தேம்பி அழுதழு திரங்க நோக்கிக்
கோற்றொடி நற்றாய் நெஞ்சம் உளைந்திது கூற லுற்றாள்.   5

     பெற்றுப் பருகி ‘இது தீம்பால் அன்று; நீர்’ என்று மனங்கொண்டு வீசி
எறிந்து மாமனது மனைக்கண் பருகிய பாலைப் பெரிதும் எண்ணித் தேம்பி
விடாப்பிடியாக அழு தேங்கத் திரண்ட வளையினை அணிந்த ஈன்ற தாயார்
கண்டு மனம் வருந்தி இதனைக் கூறினர்.

தவம்புரி நிலையின் வைகுஞ் சார்பினேம் அதாஅன்று முன்னாட்
சிவன்றனை வழிப டாமை இலம்படுந் திறத்தி னேங்கள்
அவந்தெறும் ஆன்பால் யாண்டுப் பெறுகுவம் அப்பா முக்கண்
பவன்றனை வழிபா டாற்றிப் பால்மிகப் பெறுதி கண்டாய்.      6

     தவத்தைச் செய்யும் ஆச்சிரமத்தில் தங்கும் சார்பினையுடையேம்.
அஃதன்றியும் முற்பிறப்புக்களில் சிவபிரானை வழிபாடு செய்யாமையால்
இப்பிறப்பில் வறுமையுற்ற இயல்பினையுடையேமாகிய யாங்கள் துன்பத்தைப்
போக்குகின்ற பசுப்பால் எங்கே பெறுவேம்! முக்கண் மூர்த்தியாகிய சயம்
புவைப் பூசனை செய்து பால் மிகவும் பெறுதி.

     பவன்-உலகத் தோற்றத்திற்குக் காரணமானவன்; அழிவில்லாதவன்
எனினும் ஒக்கும். வறுமைக்குக் காரணம்!  ‘இலர் பலர்’ (திருக்.270) அவம்
தெறல்; ‘செல்வப் பெருக்க முடையார்க்கு உணவாகிய ஆன்பால் உடம்பு
நோயின்றி வளரச் செய்யும் மருந்தும் ஆதல்‘ (ஆசிரியர் அருளுரை சிவஞா.
12ஆம் சூத்திரம்)

கச்சிமா நகரத் தெய்திக் கண்ணுதல் பூசை ஆற்றி
இச்சையின் ஏற்ற மாகப் பெறுவைஎன் றியம்பும் அன்னை
மெச்சிட விடைகொண் டேகி விழைதகு காஞ்சி எய்தி
முச்சகம் புகழுந் தான்தோன் றீச்சர முதலைக் கண்டான்.   7

     ‘காஞ்சி மாநகரை அடைந்து சிவபிரான் பூசனையை இயற்றி
விருப்பினும் மிகுதியாகப் பெறுவாய்’ என்றறிவுறுத்தி அன்னை பாராட்ட
அப்பொழுதே விடை பெற்றுக்கொண்டு விரும்பத்தக்க காஞ்சியை அடைந்து
மூவுலகும் புகழும் தான் தோன்றீச்சர முதல்வனைத் தரிசித்தனன்.

கண்டுளங் குழைந்து நெக்குக் கரையிலாக் காதல் பொங்கித்
தொண்டனேன் உய்ந்தேன் என்று தொழுதெழுந் தாடிப் பாடி
இண்டைவார் சடிலத் தண்ணல் இணையடி அருச்சித் தங்கண்
அண்டரும் வியக்கு மாற்றால் அருந்தவம் புரியும் எல்லை.   8