‘கண்டு உள்ளம் கனிந்து நெகிழ்ந்து எல்லையற்ற பேரன்பு ததும்பித் தொண்டனேன் பிழைத்தேன்’ என்று கூறித் தொழுது எழுந்து ஆடிப் பாடி இண்டை மாலையைத் தரித்த நீண்ட சடை முடியண்ணலின் துணையடிகளை அருச்சித்து ஆங்கே தேவரும் இறும்பூது கொள்ளும் முறையால் அரிய தவத்தைச் செய்யும் பொழுது. ‘‘கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடல்’’ (சிவ. சி.12-2) உவகை மிகுதியில் நிகழும் மெய்ப்பாடு (ஆசிரியர் திருமொழி.) இண்டை-வட்டமாகச் சமைக்கும் முடிமாலை. இந்திரன் வனத்து மல்லிகை மலரின் இண்டை சாத் தியதென நிறைந்த, சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண சைலனே கைலைநா யகனே’ (சோண. 57) என்புழிக் காண்க. தகைபெறுஞ் சயம்பு லிங்கத் தலத்துறை கணிச்சிப் புத்தேள் உகைமுகில் ஊர்தி அண்ணல் உருவுகொண் டெய்திப் பத்தி மிகையினை அளந்து தானாந் தன்மையை விளங்கக் காட்டி நகைமுகம் அருளித் தீம்பாற் கடலினை அழைத்து நல்கி- 9 | பெருமைபெறும் தான்தோன்றீச்சரப் பெருமானாகிய மழு ஏந்தி, மேகத்தைச் செலுத்துகின்ற வாகனமாகவுடைய இந்திரன் வடிவுகொண் டெழுந்தருளிப் பேரன்பின் மிகுதியை அளந்து தானே அவ்வுருக்கொண்ட தன்மையைத் தெளிய உணர்த்தி நகை முகங்காட்டி அருளி இனிய பாற் கடலை வருவித்து அளியொடும் ஈந்து, சயம்பு, சுயம்பு, தான்தோன்றீசன் என்பன ஒரு பொருளன. பெருமானார் இந்திரன் வடிவிற்காட்சியருளிச் சிவபிரானை இகழப் பொறாது உபமன்னிய முனிவர் அகோர மந்திரம் ஓதித் திருநீற்றைத் தெறித்து அவ்விந்திரனை அழிக்கப் புகுகையில் நந்தி தேவர் தடுத்தமையால் தோல்வியுற்ற முனிவரர் மூலாக்கினியால் உயிர்விடத் துணிந்த அளவில் இறைவன் திருவுருக்காட்டி யாண்டனர். நகை முகம் அருளல்: ‘நகைமுக விருந்து செய்தான்’ (சீவ.) முற்றுணர் தெளிவும் மூவா இளமையுஞ் சாக்கா டெய்தாப் பெற்றியும் உதவி இன்னும் வேண்டுவ பேசு கென்றான் கற்பகம் சுரபி சிந்தா மணிவளை கமல மெல்லாம் பற்றுடை அடியார் ஏவற் பணிசெயப் பணிக்கும் வள்ளல். 10 | கற்பகத் தருவும், காமதேனுவும், சிந்தாமணியும், சங்க நிதியும், பதும நிதியும் மற்றுள்ளனவும் ஆகிய இவற்றைத் தன்னிடத் தன்பு பூண்ட தொண்டர்க்கு ஏவல் செயப் பணிக்கும் வள்ளலாகிய பெருமானார் யாவற்றையும் தெளியும் மெய்யறிவையும் மூப்படையாத இளமையையும், இறவாத இயல்பினையும் அருளி இன்னும் விரும்பியவற்றைக் கேளென்றனர். |