என்னலும் முனிவன் போற்றி எளியனேற் குனது நோன்தாள் மன்னுபே ரன்பு வேண்டும் மற்றும்இவ் விலிங்க மூர்த்தி தன்னில்எக் காலும் நீங்காத் தண்ணருள் கொழித்து வாழ்ந்து துன்னினோர் எவர்க்கும் பாவம் துமித்துவீ டுதவ வேண்டும். 11 | திருவாக்கைக் கேட்ட அளவிலே உப மன்னிய முனிவர் துதித்து வலியிலேனாகிய அடியேனுக்கு உன்னுடைய வலிமை அமைந்த திருவடிக்கண் நிலைபெற்ற பேரன்பு வேண்டும்; மேலும் இவ்வருட் குறியில் எந்நாளும் நீங்காத தண்ணிய அருளை வெளிப்படுத்தி வீற்றிருந்து அறிவால் அணுகினோர் யாவர்க்கும் பாவத்தைக் கெடுத்து முத்தியையும் உதவுதல் வேண்டும். ‘நோன்றாள்-வினைத்தொகை. நோன்றல்-பொறுத்தல். ‘எடுத்துச் சுமப்பானை’ என்றார் புடை நூலாசிரியரும்’ (சிவஞா.12) (அறியாமையை உடைத்தற்குக் காரணமாகிய) வலியினையுடைய தாளினையும் (திருமுரு.4. உரை) கொழித்தல்-மேலிடல். என்றுநின் றிரந்து போற்றும் இளவலுக் கருளிச் செய்து மன்றலங் குழலி யோடும் இலிங்கத்தின் மறைந்தான் ஐயன் அன்றுதொட்டறிஞர்க் கெல்லாம் அருட்பெருங்குரவனாகி வென்றிவெள் விடையான் சைவம் விளக்கிவீற் றிருந்தான் அன்னோன். 12 | என்று கூறித் திருமுன் நின்று குறையிரந்து துதி செய்யும் மழ முனிவர்க்குத் திருவருள் புரிந்து ஏலவார் குழலியோடும் ஐயன் சிவலிங்கத்தில் மறைந்தருளினன். அந்நாள் முதல் உபமன்னிய முனிவர் அறிஞர் யாவர்க்கும் பேரருளையுடைய ஆசாரியராகிவென்றி வாய்ந்த வெள்ளை விடையுடைய பெருமானது சிவநெறியை விளக்கி வீற்றிருந்தார். கண்ணன் சிவதீக்கை பெறல் பிருகுமா முனிவன் சாபப் பிணிப்பினாற் பிறந்து வீயும் மருமலர்த் துளவோன் கண்ண னாயநாள் மனித யாக்கை அருவருப் பெனஆங் கெய்தி அத்தகு முனிவன் றன்பால் திருவளர் தீக்கையுற்றுத் தேகசுத் தியினைப் பெற்றான். 13 | பிருகு முனிவரர் சாபத் தொடர்பினால் பிறந்து இறத்தலைச் செய்யும் மணங்கமழும் துளவ மாலையை யணிந்த திருமால் கண்ணபிரானாய்த் தோன்றிய காலத்தில் இம்மானுட யாக்கை அருவருக்கத் தக்கதென அவ்விடத்தை யடைந்து யாவரும் போற்றும் இயல்பினையுடைய உபமன்னிய முனிவரிடத்து அருட்செல்வ வளர்ச்சிக்குக் காரணமாகிய சிவதீக்கை பெற்றுச் சரீர சுத்தியினை அடைந்தனர். பாண்டவர் தூத னென்னப் பயிலிய பெயரான் அங்கண் ஆண்டகை அடிகள் போற்றி வைகினான் அன்று தொட்டு நீண்டுல களந்த மாலை நிறைதிரு நீற்றுக் கோலம் பூண்டுயர் சைவன் என்னப் புகன்றீடும் உலக மெல்லாம். 14 | |