304காஞ்சிப் புராணம்


முற்றிப்பல உகம்அங்கவர் தண்டாதமர் முயலக்
கற்றைச்சடை இறையோன்மலை மகளோடுயர் ககனத்
துற்றுச்சம ராடற்றிறம் நோக்கிஉறைந் தனனால்
வெற்றித்திறந் தோலாவகை மேன்மேல் அமர் மூண்ட.   3

     பல யுகங்கள் முற்றுகையிட்டு அவர் நீங்காது போரைத் தொடங்கச்
சிவபெருமானார் உமையம்மை யொடும் உயர்ந்த விசும்பில் எழுந்தருளிக்
கடும்போர் வன்மையைக் கண்டு கொண்டிருந்தனர். வெற்றி தோல்வியுறாத
வகையிற் போர்கள் மேன்மேல் முறுகி வளர்ந்தன.

உண்ணாஅமு தனையாள்எனை உடையான்முகம் நோக்கி
எண்ணால்உணர் வரியாய் திறத்தோர்இவர் தம்முள்
மண்ணாவிறல் ஒருகூற்றினர் வாகைபுனை கெனலும்
விண்ணாடரை வன்றானவர் வென்றார்திறல் கொண்டார்.   4

     உண்ணப்படாத அமிழ்து போல்பவராகிய அம்மையார் என்னை
அடிமையாக உடைய பெருமான் திருமுகத்தை நோக்கி ‘நினைப்பாலும்
உணரவரியவரே! இரு கூற்றினராகிய இவர் தங்களுள் விலக்கப்படாத
வன்மை அமைந்த ஒரு சார்பினர் வெற்றி மாலையைப் புனைவாராக
அருள் செய்மின்’ என்றலும் விண்ணவரை வறிய அசுரர் வென்று வெற்றி
கண்டனர்.

அதுகண்டுமை அந்தோபெரு மானே அருள்புரியாய்
மதுஒன்றிய வெற்றித்தொடை வானோர்புனை கெனலும்
விதுஒன்றிய சடையோன் அருள் விண்ணோர்புடை வைப்ப
முதுவன்பகை அறவென்றனர் முடிவானவர் அம்மா.     5

     அசுரருடைய வெற்றியை உமையம்மையார் நோக்கி அந்தோ!
பெருமானே! தேன் பொருந்திய வாகை மாலையைத் தேவர் புனைய
அருள் புரியாய் என்று வேண்டவும் இளம் பிறையைச் சூடிய சடைப்
பெருமான் அருளைத் தேவர் பால் வைத்தமையால் அத்தேவர் முதிர்ந்த
பெரும் பகைவராகிய அசுரரை முற்றக் கெடும்படி வென்றனர்.

     அம்மா, வியப்பிடைச் சொல். முதுபகை, வழி வழி வந்த பகை.

வெற்றிப்பறை சாற்றிப்பெரு விறல்விண்ணவர் மீண்டு
கொற்றத்துயர் கடவுள்ளவைக் களமேவரக் குறுகிச்
செற்றுச்செரு வென்றோங்கிய திறலோடுறை குற்றார்
மற்றப்பொழு துயர்வாசவன் மதமுற்றுரை செய்வான்.   6

     பெருவலிமையையுடைய தேவர் வென்றெறி முரசினை முழக்கி
மீண்டுபோய் வென்றியான் உயர்ந்த தேவ சபையைக் குறுகிச் சினங்கொண்டு
போரில் வென்றுயர்ந்த இறுமாப்புடன் வீற்றிருந்தனர். அப்பொழுது உயர்ந்த
தேவேந்திரன் தருக்குற்றுக் கூறுவான்.