அச்சோஎன தாண்மைத்திறம் ஆர்கூறுவர் என்றான் அச்சீர்அவன் றனைவெங்கனல் அவனைச்சமன் நிருதி அச்சூரனை அவனைப்புன லரசன்வளி அவனை அச்சீலனை அளகைக்கிறை ஈசானன்அங் கவனை. 7 | ‘அச்சோ! எனது ஆளுந் திறத்தை யாவர் கூற வல்லவர்’ என்றனன். அச்சிறப்புடைய இந்திரனை அக்கினியும், அவனை வருணனும், வருணனை வாயுவும், அவனை ஈசானனும், அவனை அச்சீர், அச்சீலம்-அத்தன்மையாக என்னும் பொருளன. ஈசானனை மலரோன் அவன் றனைநாரணன் இகலிப் பேசாவிறல் பேசிப்பிணக் குறுபூசலை நோக்கித் தூசார்வன முலைஅம்பிகை துணைவற்றொழு தின்னோர் மாசார்செருக் கொழியும்படி வள்ளால்அருள் என்றாள். 8 | நான்முகனும், அவனைத் திருமாலும் பகைத்துப் பேசத் தகாத வெற்றியைப் பேசி மாறுபாடு மிகுகின்ற ஆரவாரத்தொடு கூடிய போரினை நல்லாடையைப் புனைந்த அழகிய கொங்கையையுடைய உமையம்மையார் நோக்கித் தன் நாயகரைத் தொழுது ‘இவர் தம்முடைய குற்றம் நிரம்பிய இறுமாப் பொழியும் வகை வள்ளலே! அருள் செய்க’ என்று வேண்டினர். பெருமான் தேவர்கள் அகந்தையை ஒழித்தல் எழுசீரடி யாசிரிய விருத்தம் நிணம்புல்கு சூலம் வலமாக ஏந்தி நெடுமால் விரிஞ்சன் முதலோர், பிணம்புல்கு காட்டின் நடமாட் டுகந்து பிறைவேணி வைத்த பெருமான், கணம்புல்கு தேவர் முரணைத் தவிர்ப்ப அவர் முன்பு காமர் அளிவீழ், மணம்புல்கு தொங்கல் அணிதோள் இயக்க வடிவொன்று கொண்ட ணுகினான். 9 திருமால் பிரமன் முதலானோருடைய பிணங்களை இடு பெருங்காட்டில் பகைவருடைய ஊன் பொருந்திய சூலத்தை வலம்பட உயர்த்தி நடமாடு தலை விரும்பிப் பிறையைச் சடையிற் சூடிய சிவபெருமான் கூடியுள்ள தேவர்தம் மாறுபாட்டைத் தவிர்க்க அவர்கள் முன்னர் அழகிய வண்டுகள் விரும்புகின்ற மணம் கமழும் மாலையை அணிந்த தோளுடைய யக்ஷவடிவம் கொண்டணுகினான். அணுகித் துரும்பை எதிர்நட்டு முன்னர் இறுமாந்து வைகும் அவனைப், பணிலத்தனாதி இமையோர்கள் நோக்கி இவண்நீ பயிற்றும் இதுவென், துணிபுற்று வைகும் ஒருநீ எவன்கொல் புகலென்று சொல்லும் மொழிகேட், டுணர்விற் சிறந்த தவர்கண்டு கொள்ளும் உவன்இன்ன பேச லுறுவான். 10 |