அமரேசப்படலம் 307


     ஓர் துரும்பிடைத் தங்கள் ஆற்றலை முழுதும் தோற்ற தேவர் அச்சம்
உற்று வியந்து நற்குணம் தலை எடுப்ப நீயாவன் என வினவலும் இயக்கர்
வடிவில் தோன்றிய பாண்டரங்கக் கூத்தியற்றும் பரமன் திருவுருவை
மறைத்தருள மனஞ்சுழன்று மயங்கும் அவர்தம் முன்னர் கரும்பின் வடிவம்
எழுதப் பெற்ற திருத்தோளியாராகிய இமயமலையரையன் மகளார் தம்மை
அவர்கள் காண எழுந்தருளினர்.

     நற்குணம் தலையெடுப்ப என்பார் ‘இரும் பண்பு கூர’ என்றனர்.

எதிர்காண நின்ற கருணைப் பிராட்டி இருதாள் பழிச்சி இமையோர்
முதிர்காதல் கொண்டு வழிபட்டு வண்கை முடிமீது கூப்பி உலகம்
பதினாலும் ஈன்ற முதல்வீ இயக்கர் பதியாம் அணைந்த அவன்யார்
மதியேம் எமக்கு மொழிகென் றிரப்ப மலைவல்லி இன்னபுகலும்.  14

     தொழநின்ற திருவருட் செல்வியின் இருதிருவடி மலர்களை ஏத்தித்
தேவர்கள் பேரன்பு மிக்கு வழிபாடு செய்து, சிரமீது கரங்களைக் குவித்துப்
‘பதினான்கு உலகங்களையும் பெறாது பெற்ற தலைவீ! இயக்கர் தலைவராய்
அணைந்த அவர் யார் அறியேமாகிய எமக்குக் கூறியருள்க’ என்று வேண்ட
மலையரையன் தவப்புதல்வியார் இங்ஙனம் விருப்பொடும் உணர்த்துவர்.

     எவன்வாணி கேள்வன் முதலோர் பதங்கள் நிலைபேறு செய்யும்
இறைவன், எவன்எப் பொருட்கும் ஆதாரமாகி எவருந் தொழப்ப
டுபவன், எவன் முற்றும் ஆக்கி நிலைசெய்து போக்கி அறிஞர்க்
கினிக்கும் அமுதன், அவனென்று காண்மின் இமையீர் இயக்க
வடிவாகி வந்த அழகன்.                                  15

     எவன் கலைமகள் நாயகனாகிய பிரமன் முதலானோர் பதங்களாகிய
சத்திய லோக முதலான வற்றை நிலைபெற நிறுவும் இறைவன்; எவன்
எல்லாப் பொருட்கும் பற்றுக் கோடாய் யாவரானும் வணங்கப் படுபவன்;
எவன் முழுதும் (அகிலமும்) படைத்துக் காத்து அழித்து மெய்யறிவினர்
உணர்வின்கண் இனிப்புறும் அமுதன்; இமையீர்!  (இமையாத நாட்டம்
உடையீர்) இயக்க வடிவிற்றோன்றி எழுந்தருளிய அழகன் அவன்
என்றுணர்மின்

     எவனுக்கு முற்றும் வடிவங்க ளாகும் எவன்உண்மை யாரும்
அறியார், எவன்எங்கும் யாவும் அறிவுற்று நிற்பன் எவனால் நடக்கும்
உலகம், எவனைத் துதிக்கும் மறைஈறு முற்றும் எவன்அங் கவைக்கும்
அரியான், அவனென்று காண்மின் இமையீர் இயக்க வடிவாகி வந்த
அழகன்.                                               16

     எவனுக்கு யாவும் திருமேனியாகும்; எவன் உண்மையியல்பை யாரும்
அறியார்களோ; எவன் எவ்விடத்துள்ள எப்பொருளையும் அறிந்தாங்கறிந்து
நிற்பனோ; எவனால் உலகங்கள் புடைபெயருமோ; எவனை