அமரேசப்படலம் 311


     போகம், பரபோகம் என்னும் இரண்டனையும், தருகின்ற மேன்மை
பொருந்திய அத்திருக் கோயில்களில் எந்நாளும் நிகரில்லாத உண்மைத்
தவத்தினர் பற்பலரும் வழிபாடியற்றுவர். மதித்தற்கரிய புகழமைந்த
அத்தலங்களிடைத் தரிசித்தவர் பிறவி நோயை நீக்கி வீட்டினை உறுவிக்கும்
திருமேற்றளி என்று சிறப்பித்துச் சொல்லப்பெறும் தலம் ஒன்றுள்ளது.

நவிலும் அத்தலத் தெய்திமுன் நாகணைப் புத்தேள்
கவிர்இ தழ்ச்சிறு நுணுகிடைக் கவுரிதன் களபக்
குவிமு லைத்தடச் சுவடுதோய் குரிசில்சா ரூபம்
புவிமி சைப்பெற விழைந்துமெய்த் தவம்புரிந் தனனால்.  5

     கூறப்பெறும் அத்தலத்தினை அடைந்து முன்னர் ஆதிசேடனைப்
பாயலாகக் கொண்ட திருமால் முன் முருக்கமலரைப் போலும் செந்நிற
மமைந்த அதரங்களையும் மிக நுண்ணிய இடையினையும் உடைய கவுரி
என்னும் உமையம்மையின் களபச்சாந்தம் பூசிய குவிந்த கொங்கைத்
தடத்தின் தழும்பு தோய்ந்த சிவபெருமானது திருவுருவத்தை நிலத்திடைப்
பெற விரும்பி உண்மைத் தவத்தை இயற்றினர்.

ஐம்பு லன்களை அடக்கிநின் றறுபகை துறந்து
நம்பு நீற்றணி அக்கமா லிமையுட னயந்து
கம்பி யாதுருத் திரங்கணித் திதயநற் கமலத்
தெம்பி ரான் அருள் வடிவினை இடையறா திருத்தி.   6

     ஐம்பொறிகளின் வழியே அறிவு புறத்திற் செல்லா தடக்கி நிறுத்தி
பகை ஆறனையும் நீக்கி விரும்பப்படுந் திருநீற்றுக் கோலத்தை உருத்திராக்க
மாலையோடும் விரும்பிப் பூண்டு மனஞ்சலியாது சீருத்திரத்தை ஒரு
வழிப்பட்டெண்ணி இருதயமாகிய நற்றாமரை மலரில் எமது பெருமானது
திருவருள் வடிவை இடைவிடாமல் நிலைபெறச் செய்து,

     அறுபகை காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம்
என்பன, ‘அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற் ஐம்புலனும் அடக்கி
ஞானப் புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராண
கோயில்’ (திருஞா. மேகராகக் குறிஞ்சி)

ஆற்ற ருந்தவம் இயற்றுழி அழல்விழித் தறுகண்
கூற்றை வென்றருள் பரம்பொருள் கருணைகூர்ந் தடல்ஆ
னேற்றின் மீதெழுந் தருளிஎம் அடியரிற் சிறந்தோய்
நோற்று நொந்தனை வேட்டன நுவறிஎன் றருள.         7

     செய்தற்கு அரிய தவத்தைச் செய்வுழி நெருப்புப் போலும்
விழியினையும், அஞ்சாமையையும் உடைய இயமனைக் குமைத்துப் பின்
அருள் செய்த சிவபிராணார் கருணைமீப் பொங்கி வலிய இடபமாகிய
ஊர்தியின் மேல் எழுந்தருளி ‘எம்மடியவர் தம்மிற் சிறந்தோனே! தவஞ்
செய்து மெலிந்தனை விரும்பிய வரங்களைச் சொல்லுதி’ என்றருள் செய்ய,