தேடற்கரிய தவத்தை இயற்றுக’ என்றருளித் திருவுருக்கரத்தலும் மனம் மாறுபாடின்றித் திருமால் அவ்விதிவழித்தங்கியிருந்து முத்தமிழ் விரகர் கொன்றைமலர் மாலையைச் சூடியுள்ள சிவபெருமானைத் திருமேற்றளியில் வழி படுங்கால் அவர்தம் பாமாலையால் திருமால் சிவபரஞ்சுடரின் திருவுருவினைப் பெற்றனர். திருமேற்றளிப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம் 1002 அனேகதங்காவதப் படலம் கலிவிருத்தம் அச்சத ருத்திர ராதியர் போற்றுபு மெச்சிய பஃறளி மேன்மை விளம்பினாம் எச்சம்இல் மேற்றளி யின்வட சார்அமர் கச்சி அநேகதங் காவதங் கூறுவாம். 1 | நூறு உருத்திரர் முதலியோர் போற்றி செய்து பாராட்டிய பல திருக்கோயில்களின் உயர்வை விளம்பினோம். குறைவில்லாத நிறைவுடைய திருமேற்றளியின் வடதிசைக்கண் பொருந்திய திருக்கச்சி அநேகதங் காவதத்தைப் பற்றிக் கூறுவோம். கறையடிச் சிறுவிழிக் கடுநடைச் சொரிமதப் பிறைஎயிற் றெறுழ்வலிப் பிளிறொலிக் கரிமுகத் திறைபுகழ்க் கச்சியில் எய்திஎம் பிரான்றனை நிறையுமெய்க் காதலான் அருச்சனை நிரப்புவான். 2 | உரலைப் போன்ற அடியினையும், சிறிய விழியினையும், விரையா நின்ற செலவினையும், சொரிகின்ற மதத்தினையும், பிறைபோன்ற தந்தத்தினையும் பெருவன்மையினையும், முழக்கொலியையும், யானை முகத்தினையும் உடைய விநாயகப் பெருமானார் புகழ்ச்சியைப் பொருந்தி யுள்ள காஞ்சியை அடைந்து எமதுபெருமானை நிறைந்த மெய்யன்பினால் பூசனையைப் புரிவார். |