சயமிகும் அனேகபேச் சுரனெனத் தன்குறிப் பெயரினால் இலிங்கம்ஒன் றிருத்தினான் பெட்பொடு மயர்வரும் பூசனை மரபுளிப் புரிதரும் இயல்புகண் டெம்பிரான் எதிர்எழுந் தருளினான். 3 | வெற்றி மிகுந்த அநேக பேச்சுரனென்று தன் பெயரானோர் இலிங்கம் தாபித்து விருப்பினுடன் மயக்கை நீக்குகின்ற சிவபூசனையை விதித்தபடி செய்யும் இயல்பினைக் கண்டு எமது பெருமானார் எதிரே காட்சி தந்தருளினர். அநேகபம்-யானை. வேட்டதென் மைந்தனே விளம்பெனத் தாதைதன் தாட்டுணை மலர்மிசைத் தாழ்ந்தெழுந் திபமுகன் நாட்டினில் யான்செயும் பணிஎவன் நல்கெனப் பாட்டளி துதைமலர்க் கொன்றையான் பகர்தரும். 4 | ‘மைந்தனே நீ விரும்பியது யாது கூறா யென்று வினவிய தந்தையார் தம் திருவடி மலர்களில் பணிந்தெழுந்து யானை முகத்தையுடைய, விநாயகப் பெருமான் ‘உலகிடை யான் செய்யும் பணியாது அருளா’ யென்று கூற இசைப்பாட்டுடன் வண்டுகள் நெருங்கா நின்ற கொன்றை மலர் மாலையை யணிந்த இறைவனார் அருள் செய்வர். கலி நிலைத்துறை சுருதி நூல்முறை நிறுவவும் தூயவர் தொடங்கும் கருமம் ஊறுதீர்த் தளிப்பவும் தயித்தியர் கயமைத் திருவி லார்க்கிடை யூற்றினைச் செய்யவும் இவண்நீ வருதல் வேட்டெமை முன்னரே வழுத்தினர் வானோர். 5 | வேத நூல் வழக்கை நிலைபெறுத்தவும் மனமொழி மெய் இவற்றால் தூய்மை யுடையவர் மேற்கொள்ளும் செய்கைகள் இடையூற்றின் நீங்கி முற்றுப் பெற அருளவும் அசுரராகிய கீழ்மைக் குணமுடைய மூதேவிகள் செயலுக்கு இடையூற்றினைச் செய்யவும் இவ்வுலகில் அவதரித்தற்பொருட்டு எம்மைமுன்னரே வேண்டித்துதித்தனர் விண்ணவர்.’ ஆத லாற்புறச் சமயநூல் அரட்டருக் கென்றும் தீது சால்இடை யூற்றினை விளைமதி சிவ நூல் வேத நன்னெறி ஒழுகுநர்க் கூறுகள் விரவா தேதம் நீத்தருள் புரிதிஎம் ஆணையின் வலியால். 6 | ‘ஆதலால், புறச்சமயம் பற்றி வேத சிவாகம நெறிகளைப் பழித்து ஒழுகும் கீழ் மக்கட்கு என்றும் தீமையமைந்த இடையூற்றினை விளைப்பாய். எமது அருள் வழி நிற்றலால் சிவநூலாகிய வைதிக நன்னெறிக்கண் செல்வோர்க்கு இடையூறாகிய துன்பங்கள் கலவாமல் நீக்கி அருள் செய்தி. |