அனேகதங்காவதப் படலம் 315


உலகெ லாமுனை வழுத்துக வழிபடா தொழியின்
கலிகொள் வேதியர் உம்பரா யினும் அவர் கருமம்
நிலமி சைப்பயன் எய்துறா தழிகநின் இணைத்தாள்
மலர்வ ழுத்தினோர் பெரும்பயன் எய்துக மாதோ.   7

     ‘உலகோர் யாவரும் உன்னைத் துதி செய்வாராக; வழிபாடு
செய்திலராயின் பெருமைகொள் வேதத்தை உணர்ந்தவராகிய வேதியராயினும்,
தேவராயினும் அவர் செய்கைகள் நிலவுலகில் பயன் கொடாதொழிக;
நின்னுடைய துணைத்தாள் மலர்களைத் துதித்தோர் பெரும் பயனை அடைக’.

மங்க லங்களும் அமங்கல மாம்உனை வழுத்தார்
தங்க ளுக்கிவை வரம்உனக் கருளினம் தக்கோய்
இங்கு நீஇன்னும் ஒன்றுகோள் இரணிய புரமாம்
அங்கண் வாழ்பவர் கேசியே முதற்பலர் அசுரர்.    8

     ‘உன்னைப் போற்றி வழிபடாதார்க்கு என்றும் மங்கலச் செயல்களும்
அமங்கலமாய் முடியும். தக்கோனே! உனக்கு இவ்வரங்களை அருள்
செய்தனம். நீ இப்பொழுது இதற்கு மேலும் ஒன்றனைக் கேட்டி. இரணியபுரம்
என்னும் அவ்விடத்தில் வாழ்பவராகிய அசுரர் கேசியே முதற் பலராவர்’.

அவனி யாவையும் அலைத்துவெங் கொலைபுரிந் தமர்வார்
அவர்கள் ஆருயிர் தாளினாற் செகுத்தவர் கருவுள்
அவர்கள் சத்தியாம் வல்லபை அணங்குவீற் றிருக்கும்
அவளை நாள்தொறுங் கெழீஇக்கலந் தன்புகொண்டமர்வாய்.  9

     ‘உலகோர் அனைவரையும் வருத்திக் கொடிய கொலையை விரும்பிச்
செய்து வாழ்வார்; அவர் பலரையும் காலாற் சிதைத்து அவர்கள்
கருவினிடமாக அவர்தம் சத்தியாகிய வல்லபை என்னும் அணங்கு
வீற்றிருக்கும் அவளை மணந்து நாடொறும் கலந்து அன்பு செய்து
வீற்றிருப்பாய்.’

வல்ல பைத்திரு வோடுனை வழிபடப் பெற்றோர்க்
கொல்லை வேட்டன யாவையும் உறுகென அருளி
எல்லை யில்பெருங் கருணையால் உச்சிமோந் தெடுத்துப்
புல்லி எம்பி ரான் விடுத்தனன் மீண்டனன் புதல்வன்.    10

     ‘வல்லபை என்னும் அச்செல்வ மகளோடு உன்னை வழிபாடு
செய்வோர்க்கு விரும்பி வரங்கள் யாவும் உறுக’ என ஒல்லையில் அருளி
அளவில்லாத பெருங்கருணையால் எடுத்துத் தழுவி உச்சிமோந்து எமது
பெருமானாரும் விடை கொடுத்தனர். புதல்வரும் விடை பெற்றுப்
பெயர்ந்தனர்.