திருமால் சூழ்ச்சி இத்தகைய தயித்தியரால் இரியல் போகி உடைந்தழியுஞ் சித்தமுடைக் கடவுளர்போய்த் திருமால் சரணஞ் சரணடைந்தார் பைத்தபணிச் சேக்கைமிசை மலர்க்கண் படுக்கும் பசுந்துளபத் தொத்துவிரியும் நறுந்தாரான் அவரோ டிதனைத் தொடங்கினான். 6 | இவ் வியல்பினையுடைய அசுரரால் அஞ்சிப் புறங்கொடுத்து உடைந்து வருந்தும் மனத்தையுடைய தேவர்கள் போய்த் திருமாலின் திருவடிகளைப் புகலடைந்தனர்; படம் விரித்த பாம்பின் பாயலில் அறிதுயில் கொள்ளும் பசிய துழாய்க் கொத்து விரிந்து கமழும், நறியமாலையை அணிந்த திருமால் அத்தேவரோடும் ஆபிசார யாகத்தைத் தொடங்கினர். வேதமனு எடுத்தோதிக் கொடிய வேள்வி புரிகாலைப் பூதமிகத் தோன்றினவால் அவைதாம் மும்மைப் புரஞ்சிதையக் காதுகெனுந் திருநெடுமால் ஏவ லாற்றிற் கடிதணைந்து நீதிநிலைத் தயித்தியர்முன் நிற்க லாற்றா தழிந்தனவே. 7 | வேத மந்திரங்களை எடுத்தோதி அக்கொடிய வேள்வியைச் செய்யுங் காலத்தில் பூதங்கள் பல அவ்வேள்விக் குண்டத்தினின்றும் எழுந்தன. அவை தம்மை முப்புரம் தகர்ந்து போக அழிக்க என்னும் திருமாலின் ஏவல்வழி விரைந்து சென்று இறைவழிபாட்டில் நியதிபூண்ட அசுரர் முன் நிற்கவும் வலியின்றி அழிந்தன. அதுகாணூஉ நனிநடுங்கும் அமரர் தம்மை முகம்நோக்கி மதுவாரும் நறுந்துளப மாயன் இதனை வகுத்துரைப்பான் இதுகேண்மின் நமரங்காள் அச்சோ அவுணர் எல்லாரும் பொதுமேவி நடம்விற்றும் புத்தேள் சரணஞ் சரணடைந்தார். 8 | அதனைக் கண்டு பெரிதும் நடுங்கும் தேவரைத் தேனொழுகும் நறிய துளசி மாலையை அணிந்த திருமால் நோக்கி இதனை விரித்துரைப்பார்; ‘நம்மவர்களே! இதனைக் கேளுங்கள். அச்சோ! அவுணர் யாவரும் பொதுத் தன்மையுற்றுத் திருக்கூத்தியற்றும் அம்பலவாணர் திருவடிகளைச் சரணடைந்தனர்.’ பொதுத்தன்மை, பரவுவார், பழித்திகழ்வாராகிய நல்லவர் பொல்லவர்க்கும் நடுவு நிற்றல். தீத்தொழிலில் தலைநின்ற கொடிய ரேனுஞ் சிவபத்தி வாய்த்தவர்கள் சாவாத மதுகை யுடையர் யாம்அவரைப் பூத்தநுதிக் கணைஒன்றாற் பொருக்கென் றழிக்கும் வலிஇல்லேம் ஆர்த்தபுகழ்ச் சிவபெருமான் தானே அதற்கு வல்லவனாம். 9 | |