32காஞ்சிப் புராணம்


ஓரிடத் துயிர்த்ததன் பறழை ஓம்புவான்
பாரிடைப் பல்வயின் உய்க்கும் பூஞைபோல்
காருடற் களமர்கைந் நாறு வாரிப்போய்ச்
சீருடைப் பணைதொறும் நடுதல் செய்வரால்,     77

     ஓரிடத்தில் ஈன்ற தன் குட்டிகளைப் பல்வேறிடங்களில் கொண்டு
போய்வைத்துக் காக்கும் பூனைபோல உழவர் ஓரிடத்து வித்திய நாற்றுக்களை
பல்வயல்களிலும் நடவு செய்வர்.

     சீருடைப்பணை-பதப்படுத்தவயல், கை-சிறிய, நாறுதல்-முளைத்தல்.

மரகதந் தளிர்த்தென வளர்பைங் கூழ்செறி
தரநிறை கழனியுள் சங்கம் ஊர்வன
பரவைநீர் மேய்ந்தெழும் படலைக் கொண்டலுள்
சரமதி நுழைந்துசெல் காட்சி சாலுமால்.         78

     மரகதம் தழைத்த தென ஒளிகிளர் பசிய பயிர் செறிந்த வயலில்
சங்குதவழ்தல், கார்காலத்துச் சந்திரன் நீர் கொண்டு நிறைந்த மேகத்திடைப்
புகுந்து செல்லும் காட்சியை ஒக்கும்.

களமர்கள் களைகளை பருவங் காட்டலும்
இளமயில் வயல்வளங் காண எய்தியாங்
குளமகிழ் கூர்தர உழத்தி மாரெலாம்
வளமலி பணைதொறும் வந்து முற்றுவார்.        79

     உழவர், களையைக்களையும் காலத்தை உணர்த்தலும், உழவர் பெண்டிர்
பலரும் உள்ளம் மகழிச்சி மிக, இளமயில் வயலைக்காண வந்தாற்போல
வளம்மிக்க வயல்கள்தொறும் வந்து சூழ்வார்.

அம்புயம் உற்பலம் ஆம்ப லாதியாம்
பைம்புதற் களையறப் பறித்த தம்உருக்
கொன்புனற் றோன்றலும் கொய்த புன்களை
பின்பினு முளைப்பதென் பெயர்த்தென் பார்சிலர்.   80

     தாமரை, நீலோற்பலம், செவ்வல்லி முதலியவற்றின் மலர்களின்
புதல்களே களைகளாக முற்றப்பறித்த தம் வடிவில் உள்ள முகம், கண்,
வாய் முதலியன பெரும் புனலில் தோன்றலும் பறித்தவை தொடர்ந்து
மீளவும் முளைப்பதும் என்னே என வியப்பர் உழத்திமாருட்சிலர்.

     இவை யன்றி வேறுகளையில் எனவும், மகளிர் உறுப்பனைத்தும்
மலர்கள் எனவும் பெறவைத்தனர்.

பங்கயம் ஆம்பலுற் பலத்தில் தேனுண்டு
தங்கிய வண்டினந் தமது வாள்முகம்
செங்கனி வாய்விழி சேர்ந்து மூசுற
அங்கவை கட்டெறிந் தகற்று வார்சிலர்.         81