320காஞ்சிப் புராணம்


     ‘நாரதனைத் துணையாக உடன் கொண்டு நடத்தி, நும் இருவீர்
உள்ளத்தும் சிறந்த வேதப்பொருள்களின் உண்மை திரியாது நிலைபெறுக’
என்றெழுச்சி யுண்டாகச் செல்ல விடுப்ப மகதியாழுடைய நாரதனும்
முனிவனும், புத்தனும் விரைந்து போய்த்திரிபுரத்தை நணுகுதலும்,

மீயுயர் புரமூன்றின் மேவுநர் அவர்செய்யும்
மாயையின் மருளுற்று மற்றவர் மாணாக்க
ராயினர் அவர்கூறுஞ் சாத்திர மதுநம்பித்
தீயதோர் வழிஒழுகிச் சிவநெறி தனைவிண்டார்.    14

     மிக்குயர்ந்த திரிபுரத்தசுரர் அவர் செய்யும் வஞ்சனையான் மயங்கி
அவர்க்கு மாணாக்கராயினர். அவர் கூறும் நூலினை நம்பிக் கொடிதாய
புறவழி ஒழுகிச் சைவ ஒழுக்கத்தைக் கைவிட்டனர்.

தாழ்நெறி தலைநின்று சாதனம் திருநீறு
வாழ்வுறுஞ் சிவதருமம் மறைநெறி கைவிட்டார்
ஊழ்வலி எவர்வெல்வார் ஊங்குவர் மனைவியரும்
யாழ்முனி மொழிகேட்டுக் கற்பினை இழந்தார்கள்.   15

     புறச்சமய நெறியில் உறைத்து நின்று விபூதி, உருத்திராக்கம் முதலிய
சாதனங்களையும் வாழ்வு மிகுக்கும் சிவ புண்ணியங்களையும் வைதிக
ஒழுக்கங்களையும் கைவிட்டனர். விதி வலிமையை யாவரே வெல்வர்.
அவர்தம் மனைவியரும் நாரதர் உபதேசத்தால் கற்பினை இழந்தார்கள்.

திருமால் திருக்கைலை அடைதல்

விழியுறக் கண்டதுவே மெம்யெனுந் துணிபினராய்
இழிதொழில் பலபுரியும் இவர்செயல் முழுதோர்ந்து
பழுதறு புகழ்மாயோன் பண்ணவர் புடைசூழக்
கழிபெரு மகிழ்வோடுங் கைலையை அணுகினனால்.   16

     கண்ணாற் காண்பனவே உள் பொருள் என்னும் உறுதியினராய்ப்
பாதகச் செயல் பல விரும்பிச் செய்யும் திரிபுரர்கள் தம்முடைய செயல்களை
முழுதும் ஆராய்ந்து குற்றமற்ற புகழினையுடைய திருமால் தேவர் சூழ்ந்துவர
மிகப் பெருமகிழ்ச்சியோடும் திருக்கயிலையை அணுகினர்.

     கருதலளவையையும் நூலளவையையும் புறக்கணித்துக் கண்டதே
காட்சி கொண்டதே கோலம் என ஒழுகினர்,

அங்கணைந் திறையோனை அடியிணை தொழுதேத்தி
பங்கயக் கரங்கூப்பிப் பரிவொடும் உரைசெய்வான்
சங்கணி குழையாய்முப் புரமுறு தானவர்தாம்
எங்களுக் கிடர்செய்ய நொந்தனம் இதுகாறும்.       17