என்னும் திருவார்த்தையை எமது பெருமான் திருமுன் நிற்கும் நந்தி தேவர் வாயிலாக அறிவித்த பொழுது மாயவனும் அத்தேவரோடும் கூடி ஆலோசித்தனன். மேற்படி வேறு உருகெழு நிலம்ஒரு வையமும் இருசுடர் இருபுடை ஆழியும் சுருதிகள் துகளறு வாசியும் மருமல ரணையவன் வலவனும். 22 | வடிவுடைய பூமி ஒப்பற்ற தேர்த்தட்டாகவும், சந்திர சூரியர் இரு மருங்கும் உள்ள சக்கரங்களாகவும், வேதங்கள் குற்றமற்ற குதிரைகளாகவும் மணமுடைய மலர்த்தவிசினோனாகிய பிரமன் சாரதியாகவும், தடநெடு வடவரை சாபமும் படவர விறைபகர் நாரியும் மடல்விரி துளவினன் வாளியும் கடவுளர் பிறர்பிற கருவியும் 23 | பரப்பும் உயர்ச்சியும் உடைய மேருமலை வில்லாகவும், படமுடைய பாப்பரசாகிய வாசுகி நாணாகவும், இதழ் விரிகின்ற துளவ மாலையையுடைய மால் அம்பாகவும், தேவர் பிறர் பிறகருவிகளாகவும், ஆயினர் அதுபொழு தண்ணலும் ஏய்வுறும் இரதம தேறினான் மாயிரு நெடியவில் வாங்கினான் காய்கனல் உமிழ்கணை பூட்டினான். 24 | அமைந்தனர்; அப்பொழுது பெருமானாரும் பொருந்தும் தேரில் ஏறினர்; மிகப்பெரிய நீண்ட வில்லை வளைத்தனர்; அழிக்கின்ற நெருப்புமிழும் அம்புகளைப் பூட்டினார். எறுழ்வலி முழுவதும் எண்ணினான் கறுவுறு குறுநகை காட்டினான் முறுவலின் உயர்புரம் மும்மையும் நெறுநெறு நெறுவென நீறின. 25 | தேவர்களுடைய பெருஞ்செருக்கை முற்றவும் திருவுள்ளத்தி லெண்ணினர்; சினத்தொடு கூடிய புன்னகையைத் தோற்றுவித்தனர்; புன்சிரிப்பினால் உயர்ந்த நகரங்கள் மூன்றும் ‘நெறு நெறு நெறு’ எனும் ஒலிக்குறிப்புடன் நீறாயின. எறுழ்வலி-ஈண்டு இறுமாப்பு. அமரேசப் படலம் 6-ஆம் செய்யுளில் வரும் திறலும் இப்பொருளுடையதே; தம்மால் இயல்வதாகத் தேவர் தத்தமுட் கருதினர். |