பரவுறும் இமையவர் பார்த்தனர் குரவையி னொடுமகிழ் கூர்த்தனர் பொருபுள கமும்உடல் போர்த்தனர் அரகர கரவென ஆர்த்தனர். 26 | துதி செய்யும் தேவர்கள் நோக்கினர்; குரவைக் கூத்தொடும் மகிழ் மீக்கூர்ந்தனர்; மயிர்க்கூச் செறிவான் உடலை மறைத்தனர்; ‘அர அர அர’ என ஆரவாரித்தனர். முப்பத்து முக்கோடி தேவர் ஆதலின் விரிவு மிகுந்த எனும் பொருளில் ‘பரவுறும்’ என்றனர் எனினுமாம். அறுசீரடி யாசிரிய விருத்தம் அனைய வானவர்க் கரும்பெறல் வரம்பல அருள்செய்து கயிலாயத், தெனையு டைப்பிரான் இனிதெழுந் தருளினன் இமையவர் எல்லாரும், நனைம லர்த்துழாய் நாரணன் அயனொடு நலம்பெறக் குழீஇ அந்நாள், வினைஇ கந்துல குய்யுமா றிஃதொன்று விதிக்கலுற் றனர்மன்னோ. அத்தகைய தேவர்க்குப் பெறலரிய வரங்கள் பலவும் அருளி என்னை அடிமை கொண்ட பெருமான் கயிலாயத்திற்கு இனி தெழுந்தருளினர். தேவர் யாவரும் தேன்பொருந்திய துழாய் மலர் மாலையையுடைய திருமால் பிரமரொடும் நலமுறக்கூடித் தீவினை நீங்கி உலகோர் வாழ்வுறு மாறு ஓர் கட்டளையிட்டனர் அந்நாளில். இற்றை நாள்முதல் சைவலிங் கார்ச்சனை இல்லவர் வினைமாசு செற்ற நீற்றணி கண்டிகை இரந்தவர் சிவன்பெயர் வழுத்தாதார் கற்றும் அஞ்செழுத் துருத்திரங் கணித்திடார் எமக்கய லவராக அற்ற வாறவர் கடையரே எனவகுத் தவரவர் இடம்புக்கார். 28 | ‘இந்நாள் முதலாகச் சிவலிங்க பூசனை இல்லாதவரும் தீவினையாகிய அழுக்கைச் சிதைக்கின்ற திருநீற்றினையும் அணிகின்ற உருத்திராக்க வடத்தையும் கைவிட்டவரும், சிவபிரானுடைய திருநாமத்தைக் கணிக்காத வரும், பன்னூல் பயின்றும் அஞ்செழுத்தாகிய சீருத்திரத்தை எண்ணாதவரும் எமக்கயலவராகுக. அவ்வாறன்றி மேலும் அவர் கடைப்பட்டோர் ஆவர்’ என வகுத்துரைத்து அவரவர் உலகின் இருக்கையை எய்தினர். புத்தனும் நாரதனும் பூசனை புரிதல் மன்னு நாரத முனிவனும் புத்தனும் மனங்கவன் றழிந்தேங்கி என்ன காரியம் இயற்றினம் இமையவர் இயம்பிய மொழிகேட்டுப் பன்ன ருஞ்சிவ பத்தரில் உயர்ந்தவர் பழமறை கரைகண்டோர் அன்ன தானவர் தமைவறி தேமயல் பூட்டினம் அந்தோவே. 29 | |