கயிலாய நாதர் காட்சி தந்தருளல் பளிக்கு மால்வரை நிமிர்ந்தன விடைமிசைப் பல்கணம் புடைசூழ, ஒளிக்கு ழாந்திரண் டெழுந்தென எழுந்தருள் ஒருவனைக் கண்ணுற்றார், தெளிக்கும் இன்னிசைத் திவ்வியாழ் முனிவனுந் தேரனும் விழிநீருட், குளிக்கு மேனியர் பலமுறை பணிந்தனர் கூறுத லுற்றாரால். 33 பல்வகைப் பூத கணங்கள் புடைசூழப் பளிங்கால் இயன்ற பெருமலை கால் கொண்டு நிமிர்ந்தாற் போன்ற விடைமேல் ஒளிக்கூட்டங்கள் திரண்டெழுந்தாற் போல எழுந்தருளும் ஒப்பற்ற முதல்வனை இன்னிசையைப் பிலிற்றும் வார்க்கட் டமைந்த யாழுடைய நாரதனும், புத்தனும் கண்களாரக் கண்டு அன்பினால் வழியும் கண்ணீருள் மூழ்கும் மேனியராய் பலமுறை வணங்கிக் கூறுவாராயினர். ஐய னேஉனக் கடியரை அடியரேம் அரில்படு புறநூலான், மையல் பூட்டினேம் இப்பிழை பொறுத்தருள் வள்ளலே எனவேண்டத், தொய்யில் பூத்துவிம் மாந்தெழுந் தணிகெழு துணைத்த பூண் முலைக்கொம்பர், செய்ய வாய்உமைக் கொருபுறம் அளித்தருள் சிவபிரான் இதுபேசும். 34 ‘ஐயனே! உனக்கடியராயினாரை அடியேம் குற்றமுடைய புறச்சமய நூல்கொண்டு வஞ்சித்து மயங்க வைத்தேம்; வள்ளலே! இப்பிழையைப் பொறுத்தருளுக’ எனக் குறையிரப்பத் தொய்யில் பொலிந்து பூரித்து நிமிர்ந்து அழகு கெழுமி இணைந்த அணிகளையுடைய கொங்கையையும், இந்திரகோபம் அனைய சிவந்த அதரத்தையும் உடைய உமையம்மையார்க்கு ஓர் பாகம் அளித்தருள் சிவபெருமான் இதனைக் கூறும். துணை-இரண்டு. தொய்யில்-தனத்தில் எழுதப்படும் கோலம். மேற்படி வேறு கொடியநீர் இழைத்த பாவம் கோடியாண் டவதி யாற்றுங் கடன்நெறி எவற்றி னானுங் கழிவுறா கண்டீர் நந்தம் அடியரைப் படிற்று நூலாற் பொருளினால் ஆசை காட்டிப் படிமிசை மயக்கு வோர்கள் படுகுழி நரகில் வீழ்வார். 35 | ‘நீவிர் இயற்றிய கொடிய பாவச் செயல்கள் கோடி வருட எல்லை செய்யும் கடப்பாட்டு நல்வழி எவற்றினாலும் கழுவாயாய் நீங்கா, நம் அடியவர்களைப் பொய்ந்நூல்களைக் காட்டியும், பொருளில் விருப்பூட்டியும் இவ்வுலகில் வஞ்சிப்போர்கள் நரகக் குழி வீழ்ந்து எழார்.’ பாதகம் எவற்றி னுக்குந் தீர்திறம் பகரும் நூல்கள் மேதகும் அடியார் தம்மை மயக்கிய வினையி னோர்க்கு நோதகு நரகே யன்றி நுவன்றிடா வேறு தண்டம் ஓதுழி அதுவுங் காஞ்சி உற்றவர்க் கொழிவு கூடும். 36 | |