326காஞ்சிப் புராணம்


     ‘பாவச் செயல்கள் எவற்றினுக்கும் அவ்வவற்றில் தப்பினோர்க் குரிய
பிராயச்சித்தம் (கழுவாய்) நூல்கள் பேசும்; மேன்மை பொருந்திய அடியவர்
தம்மை மயக்கிய தீவினையை யுடையவர்க்கு வருந்தத் தக்க நரக
தண்டனையன்றி வேறோர் சிறு தண்டனைகளை நூல்கள் பேசமாட்டா.
சொல்லுமிடத்து அத்தகு தீராப் பாவமும் காஞ்சியைப் புகலடைந்தவர்க்கு
நீங்கும்.’

கச்சியில் உறுத லானும் கடுவினை மெலிதாய் விட்ட
திச்சையின் இலிங்கம் இங்கண் இருத்துபு வழிபா டாற்றும்
அச்செயல் வலியாற் சாலக் கழிந்ததே யானுங் கேண்மின்
முச்சகம் புகழும் நல்யாழ் முனிவனே புத்த ரேறே.       37

     ‘மூவுலகும் புகழும் நல்ல யாழுடைய முனிவனே! புத்தர்க்குத்
தலைவனே!  கேளுங்கள் காஞ்சியை அடைந்த காரணத்தாலே தீவினையின்
வலிமை மெல்கிற்று. விருப்பினால் சிவலிங்கம் இங்குத் தாபித்து வழிபாடு
செய்யும் அத்திண்ணிய பயனால் பெரிதும் கழிந்தது; ஆயினும்.’

பிறர்க்குப கார மாதற் பெற்றியான் ஒருகாற் பாவத்
திறத்தினைப் புரிவ ரேனுஞ் சிவநெறிச் சிதைவு தன்னை
மறப்பினும் எண்ணல் ஓம்பல் எண்ணினோர் வழங்கல் செல்லா
நெறிப்படு நரகின் வீழ்ந்து நீந்தரும் இடும்பை கூர்வார்.    38

     ‘பிறர்க்கு உதவியாக அமைய ஓர் கால் பாவச்செயலை
மேற்கொள்வரெனினும் சிவபுண்ணியச் செயலை மாற்றுதலை மறந்தும்
எண்ணாமல் குறிக்கொண்டு காக்க. சிவபுண்ணியத்தைச் சிதைக்க
எண்ணினோரும் பிற குற்றங்கள் செய்தோர் புகாத நரகக் குழியில் வீழ்ந்து
கடத்தற்கரிய துன்பக் கடலில் அழுந்துவர்,’

இன்றுநீர் வழுத்தும் அன்புக் கிரங்கினேம் நுமது பாவம்
துன்றுபல் பிறவி தோறுஞ் சுழன்றலாற் கழியா தாகும்
நன்றது கழியு மாறு நவிலுதும் இனைய வைப்பின்
மன்றமற் றெமைப்பூ சித்து வலம்புரிந் துறைதிர் என்றும்.  39

     ‘இப்பொழுது நீவிர் துதி செய்தற்குக் காரணமான அன்பினுக்கு
இரங்கி எளி வந்தனம். நும்முடைய தீவினைகள் செறிகின்ற பல் பிறப்புக்களில்
உழன்று நுகர்ந்து அல்லாமற் கழியா ஆகும். விரைவிற் கழியுமாறு கூறுவேம்.
இத்தலத்தில் எம்மை உறுதிபெற என்றும் பூசனைபுரிந்து வலம் வந்து
இருப்பீராக.’

வலஞ்செயப் புகும்அப் போதும் வெளிக்கொளும் போதும் வாயிற்
புலந்தனைச் சுருங்கை யாகப் புரிதும்அங் கவையே கன்மப்
பலங்களை நுகருந் தோற்றம் இறப்பெனும் பகுதி யாகி
இலங்கஈண் டினிது வாழ்மின் இறுதியில் தருதும் முத்தி.     40