தாமரை, செவ்வல்லி, நீலோற்பல மலர்களில் தேனுண்ணத் தங்கிய வண்டுகள் வேற்றுமையறியாது களைபறி மகளிர் தம்முடைய ஒளியுடைய முகம், தொண்டைக்கனிபோலும் வாய், கருங்கண் இவற்றின் மொய்ப்ப, வயலிடத்திலுள்ள களையைப் பறித்தெறிந்து அவ்வண்டுகளை உடன் அகற்றுவர் சிலர். பாயிதழ்த் தாமரை பறித்தங் கொப்புமை ஆயுந ரெனமுகஞ் சேர்த்தி ஐதுதேன் வாய்மடுத் திணையில தென்று மாற்றல்போல் மீயுயர் கரைப்புறம் வீசு வார்சிலர். 82 | மகளிர் சிலர், பரவிய இதழ்களையுடைய தாமரை மலரைப் பறித்து ஒப்புடைமை ஆராய்வார் போல முகத்தொடு சேர்த்தித் தேனைப்பருகி, ஒப்பில தென அகற்றுதல்போல மேலே உயர்ந்த கரைக் கயலில் வீசுவார். இணைவிழிக் கிணையிலை என்ப தண்மையின் அணுகிநீ காணென அழைத்துக் காட்டல்போற் பிணையுநா சியினெதிர் பிடித்து மோந்துதேன் தணிவிலுற் பலமுடி சார்த்து வார்சிலர். 83 | இருகண்களுக்கு ஒப்பின்மையை நெருங்கிக் காணெனக் காட்டுதல் போல நீலோற்பல மலரை மூக்கிற்பட மோந்து பின் கூந்தலில் முடிப்பர் சிலர். பிணையும் நாசி-கண்களொடு இணைந்த மூக்கு. சைவலங் களைகுவான் குனியத் தாழ்குழல் எய்தியெம் இனத்தினை ஒறேன்மின் என்பபோற் கைமிசை விழுந்துசிக் குண்ணக் கால்நிமிர்த் தையபூங் குழன்முடித் தணைகின் றார்சிலர். 84 | பாசியாகியகளையைப் பறிக்கத் தலையைத் தாழ்க்க அவ்வழிக் கூந்தல் முன்கைமேல் வீழ்ந்து உவமையால் எமக்கு இனமாய அப்பாசியைக்களையன்மின் என்பபோலச் சிக்குண்டு தடுப்ப நிமிர்ந்து அழகிய மலரணிந்த கூந்தலை ஒப்பனை செய்து செயலிற் றலைப்படுவர் சிலர். நறுமலர்ப் பங்கயங் களைய நாரியர் கறுவொடு முள்ளரைக் காம்பு பற்றலுந் தெறுகரங் கிழியப்புண் செய்யு மேதமக் கிறுதிசெய் வார்க்கெவ ரிடரி ழைத்திடார். 85 | மகளிர், நறுமணமுடைய தாமரை மலரைக் களை எடுப்பக் காழ்ப்பொடும் பற்றிய அளவிலே அழிக்கின்ற கை கிழிபடப்புண்ணாக்கியே விட்டது. வலிமிக்குத் தம்மை அழிப்பவர்க்கு மெலியரும் தம்மால் ஆம்சிறு தீங்கைச் செய்து வைப்பர். இப்படலம் 87ஆம் செய்யுளை நோக்குக. எவர்-எத்துணைஎளியரும். கறுவொடும் முகத்திற்கு ஒப்பாக முயலும் பகையும், பயிர்க்குப் பகையும் நோக்கியது. |