330காஞ்சிப் புராணம்


ஏய ஆணையைச் சிரமிசைக் கொண்டெழும் எனையே
தூய சீர் இலக் குமணனுஞ் சீதையுந் தொடர்ந்தார்
ஆய மூவருந் தண்டக வனத்தமர்ந் திடுநாள்
மாய மானெனத் தோன்றினன் அங்கண்மா ரீசன்.   8

     ‘ஏவிய கட்டளையைச் சிரமேற் கொண்டெழும் என்னையே பழிப்பில்
புகழுடைய இலக்குமணனுஞ் சீதையும் பின் தொடர்ந்தனர். மூவரும்
தண்டகாரணியத்தில் வாழுநாள் மாரீசன் மாயமானாகத் தோன்றி அங்கு
வந்தனன்.’

தோன்றி மற்றெனைச் சேயிடைக் கொண்டுபோய்ச் சுலவி
மான்ற அம்பினிற் பொன்றுவான் சீதையை வலியான்
ஆன்ற எம்பியை விளித்துவீழ்ந் தனன்அது கேளா
என்ற சீதையை விடுத்தெனைத் தொடர்ந்தனன் இளவல்.  9

     எதிர்வந்து என்னை நெடுந்தொலைவிற்குக் கொண்டு போய்ச்சுழலு
வித்துப் பெருமையுற்ற அம்பினில் இறக்கின்றவன் சீதையையும், வலியால்
நிரம்பிய எனது தம்பியையும் கூவி அழைத்து வீழ்ந்துயிர் துறந்தனன்.
அதனைக்கேட்டுத் தான் பாதுகாப்பென மேற்கொண்ட சீதாபிராட்டியைத்
தனி விடுத்து இளவல் என்னைத் தொடர்ந்தனன்.’

அனைய காலையில் இராவணன் அவட்கவர்ந் தகன்றான்
புனைம லர்க்குழற் பூங்கொடி தணத்தலிற் புலம்பி
இனையும் என்னுயிர் பொன்றுமுன் இரங்குதி எந்தாய்
உனைஅ டைந்தனன் சரணம்என் றழுதழு துரைத்தான்.    10

     ‘அந்நிலையில் இராவணன் அவளைக் கவர்ந்து சென்றான்; மலரைச்
சூடி அலங்கரிக்கப்பெற்ற கூந்தலையுடைய பூங்கொடி போல்வாளைப்
பிரிந்தமையால் தனித்து வருந்தும் என்னுயிர் உடம்பினின்றும் நீங்குமுன்
இரங்கி அருள் செய் எந்தையே! உன் பால் அடைக்கலமாகப் புக்கேன்’
என்று ஓவாது அழுதுரைத்தனன்.

அகத்தியர் இராமனைத் தேற்றுதல்

உரைத்த வாய்மொழி கேட்டெதிர் அகத்தியன் உரைப்பான்
விரைத்த தார்ப்புய வேந்தகேள் வீங்குநீர் உலகின்
நிரைத்த ஐம்பெரும் பூதத்தின் நிலைபெறும் உடலம்
தெரிக்கில் யாவையும் உடன்பிறந் தவையெனத் தெளிநீ.    11

     கூறிய உண்மையைக் கேட்டு அகத்தியர் மாற்றம் அளிப்பார். ‘வாசனை
வீசுகின்ற வாகை மாலையை அணிந்த தோளுடைய வேந்தனே! கேட்டி கடல்
சூழ்ந்த உலகில் முறைப்படுத்தப் பட்ட ஐவகை மாபெரும் பூதக் கூட்டுறவால்
நிலைபெறும் உடம்புகள் ஆராய்ந்து கூறில் யாவும் நம்முடன் பிறந்தவை
என உணர்தி நீ!’

     தோற்றம் ஓரிடத்தே நிகழ்தலின் ‘உடன் பிறந்தவை’ என்றனர்.