வீரராகவேசப் படலம் 331


மற்று யிர்க்குவே றாண்அலி பெண்ணென வழக்கஞ்
சற்றும் இல்லைநீர்ச் சலதியுட் படுபல துரும்பின்
பெற்றி போலும்இப் பூதத்தின் கூட்டமும் பிரிவும்
கற்று ளோய்இவை இருமைக்கும் மாயைகா ரணமாம்.   12

     வேற்றுமை உடைய ஆண், பெண், அலி என்னும் வழக்கு உயிர்க்குச்
சிறிதும் இல்லை. நீர்க்கடலுட் படுகின்ற பல துரும்புகளின் தன்மை போலும்
இவ்வைம் பெரும் பூதங்களின் சேர்க்கையும் பிரிவும், உணர்ந்தோய்! இவை
கூடுதற்கும், பிரிதற்கும் மாயை முதற் காரணமாம்.

செய்வி னைப்பயன் உள்ளது வருமெனத் தெளிதி
எவ்வம் உற்றுழந் திரங்கலை மகிழ்ந்திரு என்னும்
பௌவம் முற்றும்ஓர் உழுந்தள வாக்கிமுன் பருகுஞ்
சைவ மாமுனி மொழிக்கெதிர் அரசனுஞ் சாற்றும்.     13

     ‘தாம் செய்த நல்வினை தீவினையின் பயனாகிய இன்பத்துன்பங்கள்
உள்ளவை வருமெனத் தெளிதி. துன்பம் எய்தி வருந்திப் புலம்பாதே;
மகிழ்ச்சி கொள்’ என்று கூறிய அளவிலே, கடல் நீர் முழுவதையும் ஓர்
உழுந் (உளுந்து) தளவாக்கி முன் பருகிய சைவத் தபோதனர் அறிவுரைக்கு
எதிராக இராமபிரானும் சாற்றுவன்,

அத்த நின்உரை முழுவதும் உண்மையே யானும்
இத்த லைக்கிது இணங்குமோ மனையவள் மாற்றான்
கைத்த லத்தகப் பட்டுழித் தத்துவங் காண்போன்
பித்தன் என்றுல குரைத்திடும் ஆதலிற் பெரியோய்.    14

     ‘ஞானத் தந்தையே!  நின் திருவாக்கு முற்றும் உண்மையே ஆனாலும்,
இப்பொழுதிவ் வுபதேசம் பொருந்துமோ? என் வாழ்க்கைத் துணைவி
பகைவனது கைவசப் பட்டுக் கலங்கும் எல்லையில் தத்துவம் பேசுவோனைப்
பித்தன் என்றுலகம் பழிக்கும் ஆதலின், பெரியோனே!’

     பித்தன் (பேரன்பினன்) என்று புகழ்தலும் உண்டு; அறிவிழந்தவன்
என்றிகழும்.

பறந்த லைப்புகுந் தொன்னலர்ச் செகுத்துயிர் பருகிச்
சிறந்த சீதையை மீட்டபின் ஐயநீ தெரிக்கும்
உறந்த தத்துவ ஞானத்துக் குரியவன் ஆவேன்
அறைந்த வாறல தென்உளம் அடங்கிடா தென்றான்.    15

     ‘போர்க்களத்திற் புக்குப் பகைவரைப் பற்றி அவர் தம் உயிரைப்
பருகிக் கற்பிற் சிறந்த சீதையை மீட்ட பின்னர் ஐயனே!  நீ உணர்த்தும்
நுணுகிய தத்துவ (உண்மை) ஞானத்திற்குப் பாத்திரனாவேன்; கூறிய வாறன்றி
என்மனம் அமைதி பெறா’ தென்றனன்.

     தத்துவ நூல் நுணுகி நிற்றல்; ‘ஆய் இழை ஆய் ஆன்மா’ எனவும்,
வரும் அதனுரையையும் காண்க. (சிவஞா. 7-3-1)