வீரராகவேசப் படலம் 333


     அகில உலகையும் ஓரிமைப் பொழுதில் ஒடுக்குவோன்; நிலைபெறும்
மேருவை வில்லாக உடையவன்; கொடிய கொலையைச்செய்கின்ற
அம்பினையுடையவன்; ஒருவரோடு உவமிக்க வொண்ணாத அளவிட இயலாத
ஆற்றலையுடையவன்; சிவபிரான் ஒருவனே அல்லாமல் இல்லை என்னக்
கூறி முறையிடும் சொல்லற்கரிய வேதம்.

தென்தி சைக்கிறை இராவணன் திருவடி விரலின்
ஒன்ற னால்இறக் கண்டனன் ஒருசிறு துரும்பால்
அன்று விண்ணவர் தருக்கொடு மிடலறச் செய்தான்
வென்றி பூண்டுயர் கூருகிர் நகைவிழிப் படையான்.    20

     தென்திசையாகிய இலங்கைக்கு!  இறைவனாகிய இராவணனைத்
திருவடி விரல் ஒன்றன் நுதியினால் அழியச் செய்தனர்; ஒரு சிறு துரும்பை
அளவு கோலாகக் கொண்டு முன்னாள் தேவர் தம் இறுமாப்பையும்
வலிமையையும் முற்றக் கெடுத்தார். வெற்றிகொண் டுயர்ந்த கூரிய நகத்தையும்,
புன்சிரிப்பினையும், கண்ணையும் படையாக உடைய பெருமானார்.

     பிரமன் சிரத்தினை நகத்தால் கொய்தவர் வயிரவர்; ஒற்றுமை பற்றிக்
கூறப்பட்டது. புன்சிரிப்பினால் முப்புரமும், நுதல் விழியினால் மன்மதனும்
அழிந்தமையறிக. ‘‘திருவடி விரல் உகிர் விழிசி ரிப்பினால், மருவலர்க்
கடந்தருள் மதுகை எம்பிரான்’’ (வாணேசப். 14).

அனைய னாகிய தனிமுதல் பாற்சரண் அடைந்தோர்
ஏனைய வேட்பினும் எண்மையின் எய்துவர் அதனாற்
கனைகொள் பூந்தடம் உடுத்தஇக் காஞ்சிமா நகரிற்
புனைம லர்க்குழல் பாகனை அருச்சனை புரிவாய்.    21

     அத்தன்மையனாகிய ஒப்பில்லாத முதல்வனைப் புகலடைந்தோர்
எப்பொருளை விரும்பினாலும் அப்பொருளை எளிமையின் அடைவர்.
ஆகலின், ஒலிக்கின்ற பூக்களையுடைய பொய்கைகள் சூழ்ந்த இக்காஞ்சிமா
நகரில் அலங்கரிக்கப் பெற்ற மலரை யணிந்த கூந்தலையுடைய அம்மை
பாகனை அருச்சனை செய்வாய்.

வீரம் வேண்டினை ஆதலின் விதியுளி வழாது
வீர ராகவப் பெயரினால் விமலனை இருத்தி
வீர னேதொழு தேத்துதி எனமுனி விளம்ப
வீரர் வீரனும் அம்முறை பூசனை விளைப்பான்.     22

     ‘வீரனே!  வீரத்தைப் பெற விரும்பினை ஆதலின், வீரராகவேசப்
பெருமான் எனத் திருநாமமுடைய பெருமானைத் தாபித்துத் தொழுது
துதிப்பாய்’ என அகத்தியர் அறிவுறுத்த வீரருள் தலைவனாக வைத்து
எண்ணப்படுகிற இராகவனும் அவ்வாறே பூசனையைத் தொடங்குவான்.