இராமன் இறைவனை வழிபடல் அறுசீரடி யாசிரிய விருத்தம் வெண்ணீறுங் கண்டிகையும் உடல்விரவப் பாசுபத விரதம் பூண்டு தண்ணீடு மலர்க்கடுக்கை வீரரா கவமுதலைத் தாபித் தன்பால் எண்ணூறும் இருநூறும் ஆயதிருப் பெயர் இயம்பி அருச்சித்தேத்தி உண்ணீடு பெருங்காதல் வளர்ந்தோங்கத் தொழுதுநயந் துருகுங்காலை. 23 | விபூதியும், உருத்திராக்க வடமும் உடம்பிற் பொதியப் பாசுபத விரதம் பூண்டு குளிர்ச்சி பொருந்திய கொன்றைமலர் மாலையைத் தரித்த வீரராகவ முதல்வனைத் தாபித்து ஆயிரம் திருநாமங்களை அன்பொடும் எடுத்தோதி அருச்சனை செய்து துதித்து உள்ளத்துள் தங்கிய பேரன்பு வளர்ந்தோங்கத் தொழுது விரும்பி உருகுங் காலத்தில், எவ்வமறப் புரிபூசைக் கெம்பெருமான் திருவுள்ளம் இரங்கிப் போற்றும், அவ்விலிங்கத் திடைநின்றும் எழுந்தருளி விடைமேல் கொண் டமரர் சூழ, நவ்விவிழி உமையோடுங் காட்சிகொடுத்தருளுதலும் நலியா வென்றித், தெவ்வடுதிண் புயத்தோன்றல் பலமுறையுங் தொழுதேத்திச் செப்ப லுற்றான். 24 துன்பம் தவிரப் புரிகின்ற பூசனைக்கு எமது பெருமான் திருவுள்ளம் கருணை கூர்ந்து வழிபடும் அவ்விலிங்கத்தினின்றும் விடைமேல் மான் போலும் மருட்சியை யுடைய விழி உமையம்மையோடும் எழுந்தருளித் தேவர் சூழத் திருக்காட்சியை நல்குதலும் பிறரால் வருத்தப்படாத வென்றியையும் பகைவரை அழிக்கின்ற திண்ணிய புயத்தினையும் உடைய குரிசிலாகிய இராமபிரான் பலகாலும் தொழுது துதித்துக் கூறத் தொடங்கினான். அண்ணலே அடியேனுக் கெளிவந்த பெருங்கருணை அமுதே அன்பர், புண்ணியமே இராவணனாம் அரக்கர்கோன் பொலந் தொடித்தோள் சீதை என்னும், பெண்ணரசைக் கவர்ந்தெடுத்துப் போயினான் முறைபிறழும் அவனை இன்னே, நண்ணலரும் பறந்தலையிற் கிளையோடு முடிக்கவரம் நல்குகென்றான். 25 ‘தலைவனே! அடியேனுக்கு அரிய பொருளாயும் எளிதில் வந்த பெருங்கருணையையுடைய அமுதமே! அன்பர் செய் புண்ணியப் பயனே! இராவணன் என்னும் அரக்கர் தலைவன் பொன்னால் இயன்ற தொடியை அணிந்த தோளையுடைய சீதை என்னும் மங்கையர் திலகத்தை வஞ்சித்துக், கொண்டு போயினான். பிறனில் விழையாமை என்னும் அறநெறியினின்றும் வழுவிய அவனை இப்பொழுதே நெருங்குதற்கரிய போர்க்களத்தில் சுற்றத்தினரோடும் அழிக்க ஆற்றலை நல்குவாய்’ என்றனன், |