வீரராகவேசப் படலம் 335


     எனப்புகலச் சிவபெருமான் திருவருள் கூர்ந் தெமக்கு நீ இன்று
தொட்டு, மனக்கினிய னாய் உலகில் வீரரா கவனெனும்பேர் மருவி
வாழ்வாய், உனக்கிகலி எதிர்ந்தோர்கள் எனைத்துணைய ரேனும்
அவர் உடையக் காண்டி, பனித்தநறுந் தொடையோய் என்றருள்செய்து
பாசுபதப் படையும் நல்கி.                                 26

     என்று கூறச் சிவபெருமான் திருவருள் மீக் கூர்ந்து ‘‘எமக்கு நீ
இந்நாள் முதல் என் திருவுள்ளத்துக் கினியனாய் உலகத்தில் வீரராகவ
னென்னும் பெயர் பெற்று வாழ்வாய், உன்னொடு பகைத்துப் போர்க்
களத்தில் எதிர்ந்தவர்கள் எத்துணை வலியராயினும் அவர் புறங்
கொடுத்தோடக் காணுதி. குளிர்ச்சி பொருந்திய நறிய மாலையை
யணிந்தவனே!’’ என்றருள் புரிந்து ‘பாசு பதம்’ என்னும் படைக்கலத்தையும்
வழங்கி,

     முள்ளரைக்காம் பணிமுளரிப் பொகுட்டணையோன் தனிப்
படையும் முரன்று மாக்கள், கொள்ளையிடு நறைத்துளவோன்
படையும்அவர் தமைக்கொண்டு கொடுப்பித் தேனைக், கள்ளவிழ்தார்க்
கடவுளர்தம் படைபிறவும் நல்குவித்துக் கருணை கூர்ந்து, நள்ளலரைப்
பொடிபடுக்கும் பெருவரமும் அளித்தருளி நவிலுகிற்பான்.        27

     முள்ளுடைய அடித்தண்டுடைய அழகிய தாமரையோன் தனது
பிரமாஸ்திரத்தையும் வண்டுகள் ஒலித்து மிகுதி கொண்டுண்ணும் தேன்
பொருந்திய துழாய் மாலையைத் தரித்த திருமாலின் படையாகிய நாராய
ணாஸ்திரத்தையும் அவர் தம்மைக் கொண்டு கொடுப்பித்துத் தேன்
பரவுகின்ற மாலையை அணிந்த தேவர் பிறர் படைகள் யாவும் அவரவர்
தம்மைக் கொண்டு நல்குவித்து அருள்மீக்கூர்ந்து பகைவரை நீறாக்கும்
பெருவரங்களையும் அருளொடும் வழங்கிக் கூறுவார்.

     கவற்றிநெடும் பகைதுரக்கும் இவைஉனக்குக் கருணையினால்
அளித்தேங் கண்டாய், இவற்றினொடும் இளவலொடும் கிட்கிந்தை
இடத்தமர்சுக் கிரீபன் சேனை, அவற்றொடும் போய்ப் பரவை
கடந்திராவணனைக் கிளையோடும் அறுத்து வீரஞ், சுவற்றியபின்
சீதையொடும் மீண்டரசு புரிந்துகலி துரந்து வாழ்வாய்.          28

     வருத்திப் பெரும் பகைகளைப் போக்கும் இப்படைகளைக் கருணையால்
உனக்கு அளித்தோம் காண். இப்படைகளொடும், இலக்குமணனோடும்
கிட்கிந்தையில் அமர்சுக்கிரீபனைச் சேனையொடும் கூட்டிக்கொண்டு
சமுத்திரத்தைக் கடந்து போய் இராவணனை அவன் சுற்றத்தவரொடும்
கொன்று வீரத்தை வற்றச் செய்த பின் சீதையொடும் மீண் டயோத்தி புக்கு
அரசு புரிந்து பசியையும், பிணியையும், பகையையும் போக்கி வாழ்வாய்,