அலமரு விழியின மாமெ னாமுக மலர்மிசைப் பாய்தரு கயலும் மாண்டதன் குலமெனப் புறவடி கூடுங் கூர்மமும் இலவிதழ்க் கடைசியர் எளிதிற் கைக்கொள்வார். 86 | சுழலுகின்ற விழிகளை இனமென்று மதித்து முகமலர்மேல் பாய்ந்த கயல் மீனையும், மாட்சிமைப்பட்ட தன் இனமெனப் புறவடியை நெருங்கிய ஆமையையும் முள் முருக்க மலர் போன்ற அதரங்கள் கூடிய கடைசியராகிய உழத்தியர் முயலாது வைத்து எளிதினிற் கைப்பற்றினர். பறிதரக் களைந்தெறி பாவை மாரைஅம் மறிபுனற் குவளைகால் வளைத்துப் பாம்பெனப் பொறிவெரு வுறச்செயும் புடைப்பின் மொய்ம்பிலாச் சிறியருந் தம்மினாந் தீங்கி ழைப்பரே. 87 | வேர் பறியக் களைந்தெறியும் பாவை போல்பவரை மடங்கிவரும் நீரிலுள்ள அக்குவளைக் கொடிகள் காலை வளைத்துப் பாம் பென்று அவர்கள் இந்திரியங்கள் கலங்கி அஞ்சச் செயா நிற்கும். வலியர் ஒருவர் வலியிலரைத் தாக்கின் அவ்வலியிலரும் தம்மால் இயலும் தீங்கை அவ்வலி யுடையவர்க்குச் செய்வர். களிபடு சுரும்புளர் கமலக் கஞ்சமும் நளிபடு குவளையும் நனைகொள் ஆம்பலுந் தளிரியற் கடைசியர் முழுதுஞ் சாடுவார் அளிமரு வலர்க்கெவர் அன்பு செய்குவார். 88 | கள்ளுண்டு களிக்கும் வண்டுகள் சுழன்று திரியும் தாமரைகளும், பெருமை அமைந்த குவளை மலரும், தேன் பொருந்திய ஆம்பல் மலருமாகிய இவற்றை, மாந்தளிர் போலு மேன்மை வாய்ந்த அம்மருத நில மகளிர் ஒரு சேரக்களைவர். பகைவர்க்கு மிக்க அன்பினைச் செய்வாரெவர். புரைதபு பசும்பயிர்ப் பொலிவுங் கங்கெலா நிரைநிரை கிடந்தபல் நிறத்த பூக்களும் வரைதவழ் முகில்களும் வான விற்களுந் தரையிடைப் பயன்பெறச் சார்ந்த தொக்குமால். 89 | குற்றத்தினின்று நீங்கிய பசியபயிர்களின் விளக்கமும், வயல் வரம்பின் பக்கங்களிலெல்லாம் வரிசை வரிசையாகக் கிடந்த பல நிறங்களையுடைய மலர்களும், மலையிற் றவழு மேகங்களும் அதிற்றோன்றும் இந்திரதனுசுகளும் உலகினிடத்து ஓர் பயனைப் பெற அடைதலை ஒக்கும். இருள்முகி லுறழ்பயி ரிடையெ லாந்தடித் துருகெழ வயங்கியாங் குலவும் அந்நலார் திருமலர்ப் பதமெலப் பெயர்த்துத் தேங்குழற் கருஞிமி றார்த்தெழக் கரையி லேறுவார். 90 | |