அதர்வ வேதங் கூறல் ‘‘வளிதாழ் விசும்பைப் பசுந்தோலிற் சுருட்ட வல்லோர் உளரேல்புடை. வீங்கி எழுந்து திரண்டு ருண்ட இளவெம்முலை பங்கனை யன்றியும் இன்ப முத்தி அளவிற்பெற லாம்’’ என விண்ட ததர்வ வேதம். 12 | ‘காற்று மருவிய வானத்தைப் பசிய தோலினைப் போலச் சுருட்ட வல்லோர் உளராயின் புடைபரந்து பருத்துயர்ந்து திரண்டுருண்ட இளைய விருப்புடைய கொங்கையையுடைய உமையொரு கூறனையன்றியும் பேரின்பத்துக்குக் காரணமாகிய முத்தியைப் பெறும் அளவிலாகும்’ என விளம்பிற்று அதர்வ வேதம். முனிவோர்எதிர் அந்தணன் வேதம் மொழிந்த கேட்டுத் தனிநாயகன் மாயையின் மூழ்கி வெகுண்டு சாற்றும் சினநீடு தமோகுண சீலன் உருத்தி ரன்றான் மனமோடுரை செல்லரு நிட்களம் வான்பி ரமம். 13 | முனிவர்கள் முன்னிலையில் வேதங்கள் கூடியும் தனித்தனியும் மொழிந்தவற்றைக் கேட்டுப் பிரமன், தனி நாயகனது மாயையில் மூழ்கிச் சினங் கொண்டு ‘கோபமுடைய தமோகுண இயல்பினனாகிய உருத்திரனோ? மனமொழி மெய்களுக்கு எட்டாத எல்லையற்ற பொருளாகும் பரப்பிரமம் யானே என்றனன்’ மாயை, தனி நாயகனாகிய சிவபிரான்வழிச் செயற்படுவது ஆதலின் அவனுடைமை என்க. பிரணவம் உரைத்தல் சால்பான்உயர் ‘ஓம்’என் மொழிப்பொருள் சம்பு என்றல் ஏலாதென அம்மனு வேவடி வெய்தி வந்து மாலால்உரை செய்தனை நீகம லப்பொ குட்டின் மேலாய்இது கேண்மதி என்றுமுன் நின்று சொல்லும். 14 | ‘தகுதியான உயர்ந்த ஓம் என்னும் மொழியினது பொருள் அவன் என்று கூறுதல் தகாது’ என்று அப்பிரமன் கூற, அம்மந்திரமே வடிவெய்தி எதிர் வந்து ‘மயங்கி உரைத்தனை நீ, கமல மலர் மிசையுறையும் பிரமனே! இதனைக் கேட்டி’ என்று முன்நின்று கூறும். வேதத்தலை யிற்புக லுற்றுயர் வேத ஈற்றும் போதச்சுர மாய்நிறு வப்படு பொற்பி னேன்யான் மாதர்ப்பகு திக்குள் அடங்கி வயங்கி னேற்கும் ஆதிப்பரம் யார்அவ னாகும் மகேசன் அம்மா. 15 | ‘வேதத்தைத் தொடங்கும் பொழுதும் முடிக்கும் பொழுதும் மிகச் சிறப்பாய்ச் சொல்லப்படும் ‘ஓம்’ என்னும் விளக்கமுடையேன் யான். சுத்தமாயையாகிய முதற்காரணத்துள் அடங்கி விளங்கினேற்கும் முதற்றலைவன் யாவன்? அவனே மகேசன் ஆவன்.’ |