வயிரவேசப் படலம் 351


எழுசீரடி யாசிரிய விருத்தம்

     என்றிது விளம்பும் பிரணவந் தனையும் இகழ்ந்துதன் பெருமையே
வியப்ப, மன்றலந் துளவோன் ஆயிடைத் தோன்றி மன்றயான்
கருத்தன்என் றுரைத்தான், குன்றருங் கொடுநோய் ஆணவக் குறும்பாற்
கோட்படும் இருவரும் இவ்வா, றொன்றிய செருக்கான் மீமிசை இகலி
ஓவறப் பிணங்கும் அவ்வேல்வை.                           16

     என்றிதனைக் கூறும் பிரணவ மந்திரத்தையும் இகழ்ந்து விலக்கித்
தனது பெருமையையே அறுதியாகப் பாராட்டுகையில், வாசனை வீசும் துழாய்
மாலையோன் ஆங்குத் தோன்றி, ‘யானே கருத்தன்’ என்றுரைத்தனன்.
குறைவுபடாத கொடிய நோயாகிய ஆணவ மலச்சேட்டையால் பற்றப்பட்ட
இருவரும் இவ்வாற்றால் நிகழ்ந்த இறுமாப்பினால் மேன்மேற்பகைத்து
ஒழிவறப் போர் செய்யும் அப்பொழுதில்,

வயிரவத் தோற்றம்

     அலர்ந்தசெங் கமலம் நிகர்இணை விழியும் அதுமுகிழ்த்
தனையதோர் விழியும், மலர்ந்தபொன் நிறத்த கேசமும் முகரோ
மங்களும் வடிவமுங் காட்டி, நலந்திகழ் இரவி மண்டிலத் துறையும்
நாயகன் அனையது கண்டான், சலந்தவிர்த் தருள்வான் உருகெழத்
தோன்றித் தமனியக் கிரியென நின்றான்.                     17

     செந்தாமரை மலரைப்போன்ற இருகண்களும், அத்தாமரையின்
அரும்பு போன்ற நுதல் விழியும், ஒளிமலர்ந்த பொன் நிறங்கொண்ட மயிரும்,
மீசையும், உடைய வடிவந் தோன்றக் காட்டி நலம் விளங்கும் சூரிய
மண்டலத்தில் வீற்றிருக்கும் நாயகனார் அவர் நிகழ்ச்சியைக்கண்டு மாறுபாடு
நீக்கி அருள் செய்வான் அச்சமுற எதிரெழுந்தருளிப் பொன்மலை என
நின்றனர்.

     காண்டலும் நெடியோன் நடுங்கிநீத் தகன்றான் கமலநாண்
மலர்மிசைக் கடவுள், ஈண்டஎன் புதல்வா வருகென விளிப்ப
வெகுண்டருள் எம்பிரான் உருவின், ஆண்டுவந் துதித்த வயிரவப்
புத்தேள் அயன்மிசைச் செல்வுழி அயனும், மாண்டகு பிரமப்
படைஎதிர் விடுத்தான் வந்ததத் தடுப்பரும் படையே.           18

     பார்த்த அளவில் திருமால் நடுக்க மெய்திச் சேணிடைச் சென்றனர்.
செவ்விய தாமரை மலரில் இருப்போன் ‘என்புதல்வனே! இங்கு வருக‘ எனத்
தன்முகமாக அழைப்ப வெகுண்டருள் எமது பெருமான் திருவுருவினின்றும்
அங்கு வந்துதித்த வயிரவக்கடவுள் பிரமன் மேற்போருக்குச் செல்கையில்
அப்பிரமனும் மாட்சிமையுடைய பிரமாஸ்திரத்திரப்படையை வயிரவர்மேல்
ஏவினான். விலக்கற்கரிய அப்படை வந்தது.

     பிரமனுக்குச் சிருட்டித் தொழில் கற்பித்தற் பொருட்டு அவனது
நெற்றியில் உருத்திரர்கள் தோன்றினமையை மனங்கொண்டு மயங்கி ‘என்
புதல்வா’ என்றனன். இறைவன் வெகுட்சி உயிர்களுக்கு மருந்தாகலின்
‘வெகுண்டருள்’ என்றனர்.