அறுசீரடி யாசிரிய விருத்தம் இன்று தொட்டுநீ நான்முக னாகிஎம் ஆணையிற் பிறழாமே, நன்று வாழ்தியால் வேட்டது நவில்கென நாயினேன் உய்ந்தேன்இங், கொன்று நின்னடிக் கன்புதந் தடியனேன் உஞற்றிய பிழையெல்லாம், மன்ற நீபொறுத் தருளெனத் திசைமுகன் வேண்டலும் வரம்ஈந்து. 25 ‘இந்நாள் முதல் நீ நான்முகனாகி எம்முடைய ஏவலினின்றும் மாறுபடாது நலம்பெற வாழ்வாயாக! விரும்பியவற்றைக்கே’ ளெனப் பிரமன், ‘நாயனையேன் பிழைத்தேன்; இவண் நின்னடிக்கண் பொருந்திய அன்பருளி அடியேனன் செய்த பிழை முற்றும் நிச்சயமாகப் பொறுத்தரு’ ளென வேண்டலும் வரத்தை ஈந்து, வயிரவர் வெற்றிப் படர்ச்சி கூர்த்த சூலமுங் கபாலமுங் கொண்டுகை தொழுதொரு புடைநிற்கும், சூர்த்த நோக்குடை வயிரவத் தோன்றலை நோக்கினன் இதுசொல்வான், கார்த்த மேனியோய் வயிரவ காலன்நீ கலவிகரணன் சீர்கால், வார்த்தை சூழ்பெல விகரணன் பெலப்பிர மதனனு மாகின்றாய். 26 கூரிய சூலமும், பிரம கபாலமும், கொண்ட கைகூப்பி வணங்கி ஒரு மருங் கொதுங்கி நிற்கும் அச்சந்தரும் பார்வையையுடைய வயிரவத் தோன்றலை நோக்கி இதனை அருள் செய்வார்; ‘கரிய மேனியனே, வயிரவ காலனாகிய நீ, கலவி கரணன், சிறப்பமைந்த புகழ் சூழும் பெலவிகரணன், பெலப் பிரமதனன் என்னும் பெயர்களுக்கும் உரியனாயினை. சறுவ பூதைக தமனனீ எம்முடைத் தனையர்கள் தமின்மூத்த, சிறுவனேஎனத் திருவருள் செய்துநீ திறற்கணம் புடைசூழ, வெறிம லர்த்துழாய்ப் பண்ணவன் முதலிய விண்ணவர் உலகெல்லாம், குறுகி வார்கறைப் பிச்சைஏற் றவர்மனக் கொடுஞ்செருக்கறமாற்றி. 27 சறுவ பூத தமனன் நீ எம்முடைய மக்களுள் மூத்த சிறுவன் நீயே எனத் திருவருள் புரிந்து நீ வலியமைந்த சிவகணத்தவர் புடைசூழ வாசனை வீசுகின்ற துளவ மலர் மாலையை யணிந்த திருமால் முதலாம் விண்ணோர் உலகங்கள் எவற்றினுக்கும் சென்று ஒழுகுகின்ற இரத்தப்பலி ஏற்று அவர்தம் மனத்தில் உள்ள கொடிய இறுமாப்பினை முழுதும் போக்கி, விதியைப் பற்றும்இம் முனிவரர் செருக்கையும் வீட்டுகென்றருள் கூரும், பதியைத் தாழ்ந்தனன் விடைகொடு வயிரவப் பண்ணவன் படர்குற்றான், மதியக் கீற்றணி எம்பிரான் மறைந்தனன் வார்கழல் தொழுதேத்தி, அதிர்வின் தீர்ந்திடும் மலரவன் முதலியோர் அவரவர் இடம்புக்கார். 28 |