வயிரவேசப் படலம் 355


     பிரமனைப் பின்பற்றும் இம்முனிவரர் அகந்தையையும் அழிக்க
என்றருள் செய்யும் தலைவரைத்தாழ்ந்து விடைகொண்டு வயிரவக்கடவுள்
செல்லலுற்றனர். இளம்பிறையை அணிந்த எமது பெருமானார் மறைந்
தருளினர். நீண்ட அடியிணைகளைத் தொழுது துதித்து நடுக்கத்தின்
நீங்கிடும் பிரமன் முதலானோர் தத்தம் இருக்கையை அடைந்தனர்.

     உட்கத் தோன்றிய வயிரவன் முன்னுற நெடியவன் உலகுற்றான்,
தட்கச் சென்றெதிர் வாயிலோர்த் துரந்தனன் விடுவச்சேனனைத்
தாக்கிக், கொட்கச் சூலத்தின் நுதியினிற் கோத்தனன் குறுகினன்
வட்காரை, வட்கப் போர்புரி மாயவன் இருக்கையுள் மதுகையின்
நிகரில்லான்.                                          29

     நடுங்கத் தோன்றிய வயிரவர் முதற்கண் வைகுந்தத்தையடைந்து
தடையாகச் சென்றெதிர்த்த வாயில் காவலரை ஓட்டினர். சேனாதிபதியாகிய
விடுவச் சேனனைத் தாக்கிச் சுழலச் சூல நுதியிற் கோத்துக் கொண்டனர்.
வலிமையில் தமக்கு நிகர் தாமே ஆயவர் பகைவரை நாணும்படி போரைச்
செய்யும் திருமாலின் இருக்கையைக் குறுகினர்.

     பிச்சை தேரிய வருஞ்செயல் கேட்டனன் பெட்பொடும்
விரைந்தெய்திப், பச்சை மேனியோன் மனைவியர் இருவரும் பாங்குற
எதிர்கொண்டு, செச்சை நாண்மலர்த் திருவடி வணங்கினன் செம்புனற்
பலியாரும், மெச்ச நெற்றியின் நரம்பினைப் பிடுங்குபு விட்டனன்
கபாலத்துள்.                                           30

     பிச்சை ஆராய்ந்து கொள்ளுதற்கு வருஞ்செயலைக் கேட்ட பச்சை
மேனியன், சீதேவியும், பூதேவியும் இருமருங்கும் வர விருப்புடன்
விரைந்தடைந்து பண்பாக எதிர்கொண்டு சிவந்த அன்றலர்ந்த மலர்போலும்
திருவடிகளை வணங்கிச் செந்நீராகிய பிச்சையை யாவரும் பாராட்ட நெற்றி
நரம்பினைப் பறித்து அதன் வழிக் கபாலத்துள் விடுத்தனன்.

     தாரை யாகிநூ றாயிரம் ஆண்டள வொழுகியுந் தகுநெய்த்தோர்,
ஈர வெண்டலைக் கபாலத்தை நிறைத்தில திரத்தமுற்றறலோடும், வீர
மாதவன் நிலமிசை மூர்ச்சித்து வீழ்ந்தனன் அதுகாலை, வார முற்றருள்
வயிரவன் திருக்கையால் வருடினன் மயல்தீர்த்தான்.           31

     ஓரிலக்கம் வருடம் அளவும் இரத்தம் தாரையாக ஒழுகியும் ஈரிய
வெண்டலையாகிய கபாலத்தை நிறைத்திலது; இரத்தம் முழுதும் அற்ற
பொழுது வீரமுடைய இலக்குமி நாயகன் நிலமேல் மூர்ச்சையுற்று விழுந்தனன்;
அந்நிலையில் அருளுடைய வயிரவர் அன்பு வைத்துத் திருக்கையால் தடவி
மயக்கத்தைத் தீர்த்தனர்.