தாய் தந்தையர் குணம் தம்மக்களுக்குப் பொருந்து முறைப்படி வித்தில் தோன்றிய முளைகள் முன்வெளுத்துப் பின்னே பசந்து காட்டிய இயைபினால், மிகுந்து செழித்த நெற்கதிர்களும் முன்பு களங்கமில்லாத வெண்ணிறம் கொண்டெழுந்து, பின்பு பெருமையமைந்து மரகதம் போல மேனி பசந்து மடல் கிழித்தெழாநிற்கும். தந்தை குணம் மைந்தர்க்கு அமைதல்; ‘வித்தும் முளையும் வேறன்றே‘ (முத்துக்) அரமகளிர் அங்கைவளம் அறிபாக்கு மேற்போந்து திரையெறிநீர்க் கடல்வரைப்பிற் றெரிவையர்கைக் கிணையொவ்வா மரபுணர்ந்து மீண்டென்ன வானோக்கிக் கதிர்த்தெழுந்த பரவுபுனல் தடஞ்சாலி பார்நோக்கி இறைஞ்சுமால். 95 | தெய்வப் பெண்களது அழகிய கை (விசேடத்தை) ராசியை உணர மேற்போய், அலைவீசும் நீர்மயமாகிய கடல் சூழ்ந்த நிலவுலகில் பெண்கள் கைக்கு ஒப்பாகாத மரபினையறிந்து திரும்பினாற்போல விண்ணுலகை நோக்கிக் கதிர்வாங்கிப் பரந்த நீரிலுள்ள பெருத்த நெற்பயிர்கள் இந்நிலவுலகை நோக்கி வளைந்து சாயாநிற்கும். பேதைமையில் ஆடவர்முன் வளைவின்றிப் பெதும்பைமையின் மேதகச்சற் றெனவணங்கி மங்கைமையின் மிகநாணும் மாதரைப்போற் பைங்கூழின் மன்னனெதிர் கதிர்த்தெழுந்த ஏதமிலாக் கதிர்முதிர்ந்து வரவரக்கீ ழிறைஞ்சுமால். 96 | பேதைப் பருவத்தில் ஆடவர்கள் முன் சிறிதும் தலையைத் தாழ்த்தாது, பெதும்பைப் பருவத்தில் மேன்மை பொருந்தச் சிறிது தலையிறங்கி, மங்கைப் பருவத்தில் மிகவும் தலையிறங்கும் பெண்களைப் போலப் பசிய பயிராயுள்ள பருவத்தில் தனது தலைவனாகிய இந்திரனுக்கெதிரே கதிர் கொண்டு தலையிறக்கமில்லாது குற்றமில்லாத அந்நெற்கதிர்கள் பால் பற்றி முதிர்ந்து வர வர நிலவுலகை நோக்கிக் கீழே தலையிறங்கா நிற்கும். முப்பருவமும் ஒருங்கு நிகழாமையின் தன்மையின் வைத்து ஓதினார். பைங்கூழ். எழுவாய் ஏதம் இன்மை குற்றம் இன்மையாவது பின்னே பழுத்தற்குரிமை உடைமை, முதிர்ந்து வரவர-முதிர, முதிர. உருத்திட்பம் உறாக்காலைத் தலைநிறீஇ உற்றதற்பின் தருக்கற்று நனிவணங்கிப் பழுத்தகதிர்த் தடஞ்சாலி பெருக்கத்து வேண்டுமால் பெரும்பணிவு மிகச்சிறிய சுருக்கத்து வேண்டுமுயர் வெனுமொழியின் சுவைதேற்றும். 97 | வடிவு திண்மை பெறாத நிலையில் தலை நிமிர்த்து திண்மைபெற்ற நிலையில் செருக்கொழிந்து பெரிதும் தலை சாய்த்து முதிர்ந்து காய்த்த கதிர்களையுடைய பெரிய நெற்கதிர்கள், யாவர்க்கும் மிக்க பணிவு செல்வப் பெருக்கத்தில் வேண்டும், மிகவுஞ் சுருங்கிய காலத்து உயர்வு வேண்டும் என்னும் மூதுரையின் சுவையுடைப் பொருளைத் தெளிவிக்கும் |