‘சக்கரப்படை கரத்திலிருப்பிற் சிவபிரானார் திருவருள் துணையைக் கொண்டு உலகைக் காவல் செய்வேன். பெரிய மலைபோலும் பெரிய புயத்தீர்! என் செய்வேன்!’ எனக் கவலை எய்திப் பரிவுறும்பொழுது நெடிய பொன்மயமான சிறகரையுடைய கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலுக் கிரண்டாம் வடிவமாக உள்ள குற்றம் நீங்கிய பெரும்புகழினை யுடைய திரண்ட கல்லையொத்த புயத்தையும் ஒலிக்கின்ற கழலணிந்த அடியினையும் உடைய விடுவச் சேனன், அபர விண்டு எனப்பெறுவர் விடுவச்சேனர்; நந்தி எம்பெருமானை அபர சம்பு என்றாற்போல. வீரபத்திரர்பால் விடுவச்சேனன் செல்லல் அன்றென்னை வயிரவனார் சூலத்தின் விடுவித்தே யருளும் நீலக், குன்றன்னான் றனக்காழி கொணர்ந்தளித்துக் கடன்தீர்த்துக் கொள்வேன், இந்நாள், என்றெண்ணி எழுந்திறைஞ்சி வயவீர பத்திரன்பால் யான்போய் இன்னே, நன்றுள்ளம் மகிழ்வித்துக் கொடுவருவல் ஆழியென நவின்று போற்ற. 8 ‘அக்காலத்தில் வயிரவப் பெருமானார் சூலத்தில் கோப்புண்டு கிடந்த என்னை விடுவித் தருள் புரிந்த நீல மலைபோலும் நிறத்தையுடைய என் தலைவர் தமக்குச் சக்கரத்தைக் கொணர்ந்து கொடுத் திங்ஙனம் இந்நாள் கடமையை நிறைவேற்றுவேன் என்றுட்கொண்டு எழுந்து வணங்கி ‘யான் வலியமைந்த வீரபத்திரர்பாற் போய் அவருள்ளத்தை மகிழ்வித்துச் சக்கரத்தை இப்பொழுதே கொண்டு வருவேன்’ என்று கூறிப் போற்ற, அங்கவனைக் கொண்டாடி விடைகொடுத்தான் திருமார்பன் அவனும் போந்து, புங்கவர்சூழ் வயவீரன் இருக்கைமுதற் கோபுரமுன் புக்க காலை, மங்கருஞ்சீர்ப் பானுகம்பன் முதலாய வாயில்காவலர்கள் நோக்கிப், பங்கமுற வெகுண்டெழுந்தார் அச்சுறுத்தார் அதுக்கினார் பழங்கண் நீட. 9 திருமகளை மார்பிற் கொண்டவர் அவனைப் பாராட்டி விடுத்தனர். அவன் சென்று கணங்கள்சூழ வீரபத்திரர் எழுந்தருளியிருக்கும் கோயில் வாயிலை அடைந்தபோது கேடில்லாத சிறப்பினையுடைய பானுகம்பன் முதலாய வாயிற் காவலர் நோக்கிப் புறங்கொடுப்பச் சினந்து எழுந்தனர்; துன்பம் மிகும்படி அச்சப்படுத்தினர்; உதட்டைக் கடித்தனர். பிறைசெய்த கரங்கொண்டு பிடர்பிடித்து நீளிடைக்கண் உந்தலோடும், கறைசெய்த வேல்தானைக் காவலன் ஆங்கிருந் தெண்ணிக் கவலை கூர்ந்தான், முறைசெய்த முனிவோர்கள் அந்நெறியிற் செலநோக்கி முன்போய் நின்று, மிறைசெய்த செயலனைத்தும் தன்வரவும் ஆங்கவர்க்கு விளங்கக் கூறி. 10 |