பிறைபோலக் கரத்தை அமைத்துப் புறக்கழுத்தில் வைத்து நீளிடைச் செல்லும்படி தள்ளி விடலும் செந்நீர் தோய்ந்த வேற்படைத் தலைவனாகிய விடுவச்சேனன் ஆங்கிருந்து துயரம் மிகுந்து அவ்வழியிற் செல்லும் முறை தெரிந்த முனிவரர்களின் முன் சென்று நின்று வாயிற் காவலர் செய்த துன்பச் செயல்களையும், தன் வருகையின் காரணத்தையும் அவர்க்கு விளக்கிக் கூறி. விடுவச்சேனன் காஞ்சியை அடைந்து வழிபடல் இனிச்செய்யுந் திறம்நீவிர் கூறுகெனத் தாபதரும் எண்ணி நோக்கிப், பனித்துண்டம் மிலைந்தானைக் காஞ்சியினில் தாபித்துப் பரவிப் போற்றின், மனத்தொன்றும் எண்ணமெலாம் பெறுவாய் என் றியம்புதலும் மகிழ்ச்சி கூர்ந்து, கனித்தொண்டை வாய்உமையாள் ஒருபாகன் திருக்காஞ்சி நகரஞ் சேர்ந்தான். 11 ‘இனிச் செய்யும் வகையை நீவிர் கூறுக’ என்ன முனிவரரும் ஆழ்ந்து சிந்தித்துச் சந்திர சேகரனைக் காஞ்சியில் நிறுவிப் பழிச்சிப் போற்றினால் மனத்திற் பொருந்தும் யாவும் பெறுவாய்’ என்று கூறுதலும் மகிழ்ச்சி கூர்ந்து கொவ்வைக் கனி போலும் திருவாயுமையம்மையாரை ஒரு பாகமுடை யார்க்கினிய அக்காஞ்சி நகரத்தைச் சேர்ந்தனன். அங்கடைந்து தன்பெயராற் சிவலிங்கம் இருத்திமகிழ்ந் தருச்சித் தேத்திப், பொங்குபெருங் காதலினால் இனியதவம் பூண்டிருந்தா னாக அந்நாள், வெங்கடுநேர் வியாக்கிரனும் அசகரனும் பஞ்சமேட் டிரனு மென்னும், இங்கிவர்முத் தானவரும் வரப்பேற்றால் எவ்வுலகும் வருந்தச் செய்வார். 12 அங்குச் சென்று விடுவச் சேனேசர் எனப் பெயரிய சிவலிங்கம் தன் பெயரால் இருத்திப் பேரன்பினால் அருச்சித்துத் துதித்து இனிய தவத்தை மேற்கொண்டிருந்தானாக அந்நாளில் கொடிய விடத்தை யொத்த வியாக்கிரனும், அசகரனும், பஞ்சமேட்டிரனும் ஆகிய அசுரர் மூவரும் வரத்தின் வலிமையால் எவ்வுலகையும் வருத்துவாராயினார். அன்னோரைத் தெறுபாக்கு விண்ணாடர் விரிஞ்சனொடும் அளவளாவிப், பொன்னாடை யுடையான்கைப் படைஇன்றி வறங்கூரும் புதுமை நோக்கி, என்னாத னிடத்தணுகி மகிழ்ந்திறைஞ்சி இயம்புதலும் இமயம் ஈன்ற, மின்னாளும் இடத்தானும் வயவீரபத்திரனை விடுத்தான் மன்னோ. 13 அக்கொடியோரை அழிக்கத்தேவர் பிரமனொடும் கலந்து பீதாம்பரதாரியாகிய திருமாலின் திருக்கையில் சக்கரம் இன்றி வறுமை மிகும் புதுமையை மனங்கொண்டு என் நாயகனாகிய சிவபெருமானைச் சார்ந்து மகிழ்ந்து வணங்கி முறையிடலும் மங்கை பங்கனாரும் வீரபத்திரரை விடுத்தனர். |