விடுவச்சேனன் வீரபத்திரரைக் காணல் அவன் அணுகித் தயித்தியர்கள் மூவரையும் எதிர்ந்து பொருதழித்து வீட்டித், தவம்நிறையுந் திருக்காஞ்சி வளநகர்க்கு நெறியானே சார்த லோடும், சிவமுதலைத் தொழுதுறையும் முகுந்தனார் தஞ்சேனைத் தலைவன் ஆங்கே, கவலையெலாம் விண்டகல வயவீரன் றனை எளிதிற் காணப் பெற்றான். 14 வீரபத்திரர் சென்று அசுரர் மூவரையும் எதிரிட்டுப் போர்செய்து மன வலியைக் கெடுத்துக் கொன்று தவம் நிறைதற் கிடனாகிய திருக்காஞ்சி மாநகர்க்கு வழியே சாருங் காலைச் சிவபிரானாராகிய முதல்வரைத் தொழுது தவத்தில் உறையும் திருமாலின் சேனாதிபதி அப்பொழுதே துன்பமெலாம் விட்டு நீங்க அவ்வீரபத்திரரை எளிதிற் காணும் பேற்றினை எய்தினர். முயல்வுற்றும் அரிதாய திருக்காட்சி முயலாமே எய்தப் பெற்றான், இயல்புற்ற பெருந்தவத்தீர் சிவபூசைப் பயன்எவரே அளக்கற் பாலார், பெயர்வுற்றுச் சென்றாடுந் தீர்த்தம்எதிர் வந்தாடப் பெற்றோ னன்னான், பயில்வுற்ற மகிழ்வோடும் வீழ்ந்திறைஞ்சி மறைமொழியாற் பரச லுற்றான். 15 ‘பெருந்தவத்தை இயல்பாக உடையீர், முயன்றும் பெறற்கரிய தரிசனத்தை முயலாது எளிதில் அடையப் பெற்றனன் விடுவச்சேனன். ஆகலின், சிவபூசனையால் விளையும் நன்மையை யாவரே வரையறுத்துக் கூற வல்லவர் ஆவர். உறையுள் நீங்கிப் போய் ஆடற்குரிய கங்கைநீர் தன் இடத்தையுடைய அதன்கண் மூழ்கினவனை ஒத்தவனாய் நிலைத்த மகிழ்வோடும் வீழ்ந்து வணங்கி வேதப் பாக்களால் துதிக்கலுற்றான்.’ நன்பார்நீர் தீவளிவான் உலகெங்கும் விராய்நின்ற நலமே போற்றி, முன்பாலும் தென்பாலும் பின்பாலும் வடபாலும் மேலும் மூவா, நின்பாரச் சிலைபோற்றி அன்பாளர்க் கன்பான நித்த போற்றி, வன்பாளர் தமைச்சீறும் வெம்புலிப்போர்த்தன்னானே என்று வாழ்த்தா 16 நன்னிலமும், நீரும், நெருப்பும், காற்றும், வானமும், ஆகிய இவற்றினும் உயிர்களினும் கலந்து நின்ற நன்மையே போற்றி, நாற்றிசையினும் விண்ணினும் கெடாத நினது பொறையுடைய வில்லுக்கு வணக்கம். அன்புடையவர்க் கருள் சுரக்கும் நித்தனே வணக்கம். கொடியோரைச் சீறித் தெறும் கொடியபுலி ஏற்றை ஒப்பவனே என்று துதித்து, முன்பின், மேல் என்பன முறையே கிழக்கு, மேற்கு, விண்ணிடத் தவரைக் குறிக்கும். மூவாமை-தோலாமை. |