இங்ஙனம் உடம்பு கூனி வளைந்து நெளிந்தொரு விகடக் கூத்தியற்ற நோக்கிச் செந்நிறமுடைய வீரபத்திரர் புன்சிரிப்புக் கொளலும் குழுமியிருந்த கணத்தவர் கடல் பொங்கினாற் போல ஆரவார மெழ நகைத்தனர். அப்பொழுது பிரம கபாலமும் அதனை நோக்கிச் சிரித்த அளவிலே, வறிது சிறிதாகும் (தொல்-உரி. 336) போராழி அதன்வாயிற் கழிந்துபுவி மிசைவீழப் பொருக் கென்றங்கை, ஓரானை முகக்கடவுள் அதுகவர்ந்தங் கறியான்போன் றிருப்ப நோக்கிப், பேராண்மைப் படைத்தலைவன் இனிச்செயலே தென்றழுங்கிப் பேதுற் றந்தச், சீராளன் திருமுன்புங் கைகண்ட விகடநடஞ் செய்து வேண்ட. 21 போருக்குரிய சக்கரம் வெண்டலை வாயினின்றும் கழிந்து நிலத்தில் வீழ விநாயகப் பெருமான் விரையக் கைப்பற்றிக் கொண்டறிந்திலர் போல இருப்ப அதனை நோக்கிப் பேராற்றலைப் படைத்த விடுவச்சேனன் என் செய்கேன்! என வருந்தித் திகைத்து அவ்விநாயகப் பெருமான் திருமுன்பும் பயன் விளைவை நன்கறிந்த விகடக் கூத்தினைச் செய்து குறையிரப்ப, விடுவச்சேனன் விநாயகரிடத்தில் சக்கரம் பெறுதல் ஏக்கறவா னவன்இயற்றும் விகடநடம் நெடும்போதெம் பெருமான் நோக்கி, மாக்கருணை சுரந்தருளி ஆழிஅவன் றனக்களித்தான் வரத்தான் மிக்கீர், போக்கறும்இக் காரணத்தால் அன்றுமுதல் காஞ்சியின்அப் புழைக்கைத் தேவை, ஊக்கமுறுந் திறல்விகட சக்கரவி நாயகன்என் றுலகங் கூறும். 22 ஆசையால் தாழ்ந்து விடுவச்சேனர் இயற்றும் விகடக்கூத்தினை நெடுநேரம் எம்பெருமானாராகிய விநாயகர் நோக்கிப் பெருங்கருணை மீக்கூர்ந்தருளிச் சக்கரத்தை அவனுக்களித்தனர். தவப்பயனால் மிக்க முனிவர்களே! குற்றமற்ற இக்காரணத்தினால் அந்நாள் முதல் காஞ்சியில், எழுந்தருளியுள்ள துதிக்கையை யுடைய மூத்த பிள்ளையாரை எழுச்சி மிகும்வலிமை அமைந்த விகடசக்கரவிநாயகர் என்றுயர்ந்தோர் கூறுவர். ‘‘ஏக்கற்றும் கற்றார்’’ (திருக். 395) ஏக்கறல்-ஆசையால் தாழ்தல். விடுவச்சேனன் சக்கரத்தை விட்டுணுவிடம் சேர்த்தல் கலிநிலைத் துறை விகட சக்கர விநாயகன் அளித்தஅத் திகிரி அகம லர்ச்சியாற் பெற்றனன் மீண்டனன் அகிலம் புகழும் மால்புரத் தெய்தினான் பொலம்புனை ஆடைத் தகவி னானடி இறைஞ்சிஅச் சக்கரம் ஈந்தான். 23 | விகட சக்கர விநாயகர் வழங்கிய அச்சக்கரத்தை அகமலர்ச்சியோடும் பெற்று மீண்டு உலகோர் புகழும் வைகுந்தத்தை அடைந்து பொன்னாடையை அணிந்த திருமாலைப்பணிந்து அச் சக்கரத்தைக் கொடுத்தனன். |