‘நெருப்பை ஒக்கும் மாணிக்கங்களின் கதிர்கள் வீசும் காஞ்சித் தலத்தில் வரதராசப் பெயர் பூண்ட நம் திருமுன்பு நமக்கு நன் மகிழ்ச்சியை விளைக்கும் இக்கூத்தினை அன்பு கலந்து நடிக்கும் அடியவர் தமக்கு விரும்பியவற்றை அளிப்போம்’ என்றருளினர். எவர்கள் இத்தனிக் கூத்தினை இயற்றும்ஆர் வத்தார் அவர்க ளேஎமக் கினியவர் சாலஎன் றருளிப் புவனம் ஏத்தும்அத் திகிரியை விதியுளிப் பூசித் துவகை மீக்கொளக் கரமிசைக் கொண்டனன் உரைப்பான். 29 | ‘ஒப்பற்ற இக்கூத்தினை இயற்ற விருப்புடையோர் யாவர் அவரே நமக்கு மிக இனியவர் ஆவர்’ என்றருளி உலகோர் போற்றும் அச்சக்கரத்தை விதிவழிப் பூசனை செய்து மகிழ்ச்சி மிகத் திருக்கரத்தில் ஏந்திப் பின்பு கூறுவார். முன்னை நாள்உயர் கச்சியின் வயிரவ முதல்வன் றன்னை வேண்டிநன் றிரந்துசூ லத்தலைக் கிடந்த நின்னை யான்விடு வித்தனன் அதற்குநே ராக இன்ன தாயகைம் மாறுநீ அளித்தனை இந்நாள். 30 | ‘உயர்ந்த காஞ்சிமா நகரில் முற்காலத்து யான், வயிரவ முதல்வர் சூலத்தில் கோப்புண்டு கிடந்த நின்னை அவரை வேண்டிப் பெரிதும் இரந்து விடுவித்தேன். அதற்கு ஒப்பாக இத்தகைய பிரதி உபகாரம் இன்று நீ புரிந்தனை. நேராதல்-ஒத்தல் அறுசீரடி யாசிரிய விருத்தம் செய்ந்நன்றி யறிவோரும் அதன்பயனைப் பெறுவோரும் திரைநீர் வைப்பின், நின்னன்றி யாருளரோ காஞ்சியில்நீ தொழுதேத்தும் இலிங்கம் போற்றி, உன்னன்பின் செயல்இதனைக் கேட்டோர்கள் எம்முலகம் உறுக என்னாத், தன்னன்பின் கிழவோனைத் தழீஇக் கொண்டு மகிழ்ந்திருந்தான் சார்ங்க பாணி. 31 ‘கடல் சூழ்ந்த நிலவுலகில் ஒருவர் செய்த நன்றியை மறவாதிருத்தலும், செய்தார்க்கோர் தளர்ச்சி வந்துழி நீக்கி நிலை பெறுத்துதலும், நின்னை ஒப்பார் பிறர் உள்ளனர் கொல்லோ! காஞ்சியில் நீ தொழுது துதித்த இச் சிவலிங்கப் பெருமானைப் போற்றி அன்பினால் நீ செய்த இச்செய்கையைக் கேட்டவர்கள் வைகுந்த பதவியை அடைக என்றருளித் தனதன்பிற்குரிய விடுவச்சேனனைச் சார்ங்க வில்லினராகிய திருமால் தழீஇக் கொண்டு மகிழ்ந்திருந்தனர். விடுவச்சேனேசப் படலம் முற்றிற்று. ஆகத்திருவிருத்தம் - 1193 |