சிவலிங்கம் நிறுவிப் போற்றித் திகழ்சிவ ஞானப் பேற்றால் கவலும்பொய்ப் பிறவி மாசு கழுவிவீ டுறுமின் என்னா நுவலுஞ்சீர் முனிவர் கோமான் நோன்கழல் இறைஞ்சி ஏத்தித் தவலின்றத் தக்கன் ஈன்றார் அத்தொழில் தலைநின் றுய்ந்தார். 8 | சிவலிங்கப் பதிட்டை செய்து வழிபாடியற்றி விளைகின்ற சிவ ஞானத்தினால் வருந்துதற்குக் காரணமாகிய பொய்யாகிய பிறவி அழுக்கைக் கழுவி வீட்டினைத் தலைப்படுமின்’ என்று விளங்கக் கூறும் சிறப்பினையுடைய நாரத முனிவர் தம் திருவடிகளைப் பணிந்து துதித்துக் கேட்டினிற்றப்பித் தக்கன் ஈன்ற மக்கள் பூசனை முதிர்ச்சியால் பிறவியிற்றப்பினர். ஞானமாகிய நீர் என்னாமையின் ஏகதேச உருவகம். வினைவலித் தக்கன் கேளா வெய்துயிர்த் தழுங்கி வேறு தனையரைப் படைத்தான் அன்னோர் தமக்கும்அம் முனிவன் எய்தி இனையவா றியம்பி மீட்பக் காஞ்சியின் இலிங்கந் தாபித் தனையவா றருச்சித் தேத்தி அவர்களும் முத்த ரானார். 9 | தீவினை வலியுடைய தக்கன் கேட்டறிந்து நெட்டுயிர்ப்பெறிந்து வருந்தி பேறு மக்களைத் தோற்றுவித்தனன். நாரதர் மீண்டும் வந்து அம்மக்களையும் நல்வழிப் படுத்தினமையால் காஞ்சியில் சிவலிங்கம் நிறுவிப் போற்றி அவர்களும் பெத்த நிலை நீங்கி முத்தி எய்தினர். தனையர்-போலி. (வயிரவேசப்படலம் 27) தக்கன் வேள்வி செய்யத் தொடங்கல் தக்கன்ஆ ரிடருள் மூழ்கித் தழலெழ நோக்கி என்றன் மக்களைச் சிவன்பால் அன்பு மருவுறுத் துலக வாழ்க்கை ஒக்கநீ கெடுத்தாய் மக்கள் மனைஉனக் கின்மை யாக முக்கணற் குரியாய் என்னா முனிவனைச் சபித்துப் பின்னர். 10 | தக்கன் பொறுத்தற்கரிய துன்பத்துள் மூழ்கிக் கண்களில் நெருப்பெழ வெகுண்டு நாரதரை நோக்கி ‘என்னுடைய மக்களைச் சிவனுக்குரிய அன்பினராக்கி உலக வாழ்க்கையை ஒருங்கே கெடுத்தனை, ஆகலின், சிவபெருமானுக்கு அன்பினால் உரிமை பூண்டவனே! மனைவியும், மக்களும் உனக்கில்லையாகுக’ என அம்முனிவரைச் சபித்துப் பின்பு. கன்னியர் தமையே பெற்றான் முனிவனுங் கனன்று நோக்கி நின்னுடையப் புதல்வ ரெல்லாம் நெறிச்செல விடுத்தேன் அற்றால் என்னைமற் சபித்தாய் பேதைத் தக்கநீ இன்னே நெற்றித் தன்னிடை விழித்த எம்மான் தண்டிக்கப் படுக என்றான். 11 | பெண்மக்களையே படைத்தனன். நாரதரும் நெருப்பெழப் பார்த்து ‘நின்னுடைய மக்களை நல்வழியிற் செல்லச் செலுத்தினேன். அது காரணமாக எனக்குச் சாபம் கொடுத்தனை. அறிவிலியாகிய தக்கனே! நீ விரைவில் நெற்றிக் கண்ணுடைய நிமலனால் தண்டனை பெறுவாயாக’ எனச் சாபம் தந்தனர். |