| ‘‘பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய, சுருக்கத்து வேண்டும் உயர்வு (திருக்-963) | தூமதிவாக் கியகிரணந் துளித்தென்னக் கதிர்ச்சாலி காமர்மணித் தரளங்கள் கான்றுசெறுத் திடராக்கிப் பூமலரக் கால்யாத்த புனல்முழுதும் புறங்கவிழ்த்து மாமைநீர் புலர்த்தவரு மள்ளருள மகிழ்விக்கும். 98 | கதிர்களையுடைய நெற்பயிர்கள் வெண்டிங்கள் தம்மே லொழுக்கிய கதிர்களைத் துளித்தாற் போல, விருப்பஞ் செய்யு முத்துக்களைத் தம்மிடத்தினின்றும் உமிழ்ந்து வயலை மேடாக்கி் மலர்கள் மலரத் தமது கால்கள் தோறும் சிறைப்படுத்திய நீர்முழுமையும் புறத்திற்போகவிட்டு, அழகிய நீரை வடிக்க வாராநின்ற அந்நில மக்களுடைய மனமகிழச் செய்விக்கும். நெல் முத்துத் தோன்றுமிடங்களிலொன்று. வணங்குகுலைக் கதிர்ச்சாலி சிலையாக வளர்பதடி உணங்குகதிர் கணையாக ஒளிர்முளரிக் கரம்பற்றி இணங்குபசுங் குரல்கவர வரும்புட்க ளிரிந்தோட அணங்குபுரிந் தெதிர்கண்டோ ரதிசயிப்பச் செயும்பணைகள். 99 | வயல்கள் வளைந்த கதிர்க்குலையுடைய நெற்பயிர்கள் வில்லாகவும், வளர்ந்துலர்ந்த பதர் நெருங்கிய கதிர்கள் அம்பாகவும், விளங்கும் தாமரையாகிய கைகளிலேந்தி இசைந்த பசிய கதிர்களைக் கவரவரும் பறவைகள் விலகியோட வருத்தம் செய்து நேர் கண்டவர் வியப்பச் செய்யும். பாலொளிநீத் தெழும்விடத்தான் முகில்வண்ணம் படைத்திருந்த மாலவனார் கலிக்கச்சி வந்தெய்தித் தவமுஞற்றி மேலையுருச் சிவந்தென்ன வெள்ளொளிபோய்ப் பசந்தெழுந்த சாலியெலாஞ் செங்கனக நிறம்வாய்ந்து தழைக்குமால். 100 | கடலிற் றோன்றிய விட வேகத்தால் பால்போன்ற முன்னுள்ள நிறத்தை இழந்து மேகம் போலும் கருநிறவண்ணத்தைப் பெற்றிருந்த திருமாலானவர் பல நலங்களுமுடைய திருக்கச்சி நகரை அடைந்து தவஞ் செய்து முன்புள்ள கருநிறம் சிவந்தாற்போல, முன்னைய வெண்ணிறம் பருவத்தாலொழிந்து பின்பு பசு நிறங்கொண்டு மேலேழுந்த நெற்பயிர்களெல்லாம் கதிர்களால் சிவந்த பொன்னிறம் வாய்ந்து தழைத்தோங்கும். பச்சைவண்ணர், பவளவண்ணர் வரலாறு இப்புராணம் வீராட்ட காசப் படலத்துட் காண்க. நாவலோர் புனைந்துரைக்கும் நலமுழுதும் அமைந்துவட நாகஞ்சூழ்பொன், நாவலோ எனவியப்ப வளர்செந்நெல் அரிபருவம் நாடித் தெண்ணீர், நாவலோன் உளங்களிப்பப் படியெடுக்குங் குண்டைநகர் உழவர் போல்வார், நாவலோ னெனவிளிப்பத் தொழுவரெலாம் நயந்தெய்தி வினையின் மூள்வார். |