இவன்நிலை இதுவாம் ஏனை இமையவர் தமைத்த தீசித் தவமுனி சபித்தான் பார்ப்பான் தவறிலி தமியன் என்னை அவமுறப் பொருதெல் லீரும் அகாரணத் தெதிர்த்தீர் நீயிர் சிவபிரான் வெகுளித் தீக்கோட் படுகெனச் செயிர்த்து மேனாள். 12 | தக்கன் நிலைமை இவ்வாறாகும். இனி, தேவர்களாகிய ஏனையோரை நோக்கித் தவ முனிவராகிய ததீசி அந்தணனும், குற்றமற்றவனும், தனியனும் ஆகிய என்னைப் பழுதாக எதிர்த்துக் காரணமின்றிப் போர் செய்தீர் நீவிர் ஆகலின் சிவபெருமானார் தம் மறக்கருணையாகிய தண்டனையுட் படுவீராக என வெகுண்டு கூறி, மேனாளில், இருதிறத் தவர்க்கும் சாபம் பழுத்தவா றியம்பு கின்றாம் கருவியாழ் முனிவன் சிறிக் கழறிய பின்னர்த் தக்கன் தெருமரு மயலின் மூழ்கிச் செருக்கினாற் புரமூன் றட்ட ஒருவனை யன்றி வேள்வி உஞற்றுவான் தொடங்கி னானால். 13 | தக்கனுக்கும், தேவர் தமக்கும் அச்சாப விளைவுகள் பயன் தந்த வகையைக் கூறுகின்றோம். நாரத முனிவர் வெகுண்டு சபித்த பின்னர் மனம் ஒரு வழிப்படாது சுழலுதற்குக் காரணமாகிய மயக்கத்தின் மூழ்கி இறுமாப் பெய்தி முப்புரங்களையும் சிரித்தழித்த சிவபிரானைப் பகைத்து யாகம் புரியத் தொடங்கினான். அன்றுதல்-மாறுபடுதல். ததீசி முனிவர் தக்கனுக்கு உரைத்தல் மருத்துவர் முனிவர் சித்தர் வசுக்கள் ஆதித்தர் மற்றை உருத்திரர் அயன்மால் ஏனோர் யாவரும் உடங்கு சேரத் திருத்தக விளித்து வேள்வி செய்வுழித் ததீசி மேலோன் உருத்தனன் அவையை நோக்கித் தக்கனுக் குரைக்க லுற்றான். 14 | மருத்துவரும்; முனிவரும், சித்தரும், வசுக்களும், சூரியரும், பிரமன்மால் உருத்திரரும், பிறரும் ஒருங்கு சேரத் தக்கமுறையில் வரவேற்று வேள்வியைச் செய்யுங் காலத்தில் ததீசி என்னும் மேலவர் கோபித்துத் தேவ சபையைப் பார்த்துத் தக்கனுக்குக் கூறத்தொடங்கினர் தக்கன் ததீசி முனிவருக்கு உரைத்தல் அளித்தருள் பயக்கும் வேள்விக் கரசனாஞ் சிவனை ஈண்டு விளித்திலை எவன்கொல் என்று வினாதலும் தக்கன் சொல்லும் இளிப்பரும் எச்சந் தன்னை எச்சத்தால் தொழுக என்னத் தெளித்திடுஞ் சுருதி எச்சன் மாயவன் எனவுஞ் செப்பும். 15 | ‘கருணையொடுந் திருவருளைப் புரியும் வேள்விக் கரசராகிய, சிவபிரானாரை இங்கு வரவேற்று எழுந்தருளச் செய்கிலை என்னையோ’ என்று வினவத் தக்கன் கூறுவான்: ‘புகழப்படும் எச்சந் தன்னை எச்சத்தினால் வழிபடுக’ என்று தெளிய உணர்த்தும் சுருதிதானே எச்சன் என்னும் சொற்பொருள் திருமால் எனவும் கூறும்’, |