பிறர் பேதைமை பொருளாக நகை பிறந்தது; நோதகல்; ‘நோநொந்து’
(திருக். 157.) விசேடவுரையைக் காண்க. ததீசி முனிவர் மறுமொழி கூறல்
எச்சத்தால் எச்சம் என்னும் மறைப்பொருள் இதுவோ கூறீர் எச்சத்தின் வேறாம் ஏனைக் கருமங்கட் கெச்சம் போல எச்சத்திற் குயர்ந்தோன் வெள்ளை ஏற்றினான் எனுங்க ருத்தால் எச்சச்சொல் லதனான் முக்கட் பகவனை இயம்பும் அங்கண். 17 |
‘எச்சத்தால் எச்சம் என்னும் வேத வாக்கியப் பொருள் இதுவோ
கூறுமின். வேள்வியின் வேறாகும் பிற நற்செயல்களுக்கு வேள்வி சிறந்தது
போல எச்சத்திற்குத் தலைவர் சிவபிரான் என்னும் தாற்பரியத்தினால் எச்சம்
என்னும் சொல்லால் முக்கட்பகவனை அவ்வேதம் கூறும்.
ஆதலின் எச்சந் தன்னால் அணங்கொரு பாகன் றன்னை மாதவன் முதலாம் விண்ணோர் வணங்கினர் வழிபட் டுய்யப் போதுவர் என்ப தன்றே அம்மறைப் பொருளாம் அன்றி ஏதமில் எச்சந் தன்னால் தனைத்தொழும் என்ப தாமோ. 18 |
‘ஆகலின் வேள்வியால் உமையொரு கூறனைத் திருமால் முதலாந்
தேவர் வணங்கி வழிபாடு செய்து தப்பிப் பிழைக்க முயல்வர் என்பதன்றோ
அவ்வேதத்தின் கருத்தாம் அல்லாமல் குற்றமற்ற வேள்வி தன்னையே
தொழும் என்று பொருள் காணுதல் தகுமோ?’
வேள்வி வடிவினன் திருமால்; வேள்விக்கு நாயகன் சிவபெருமான்.
‘எச்சமேசுரும் புளர்துழாய் அலங்கலான் என்ப., எச்ச நாயகன் பொலந்துணர்
இதழிமா லிகையான்’ (சார்ந்தா. 25)
சகந்தனில் எவருந் தம்மின் உயர்ந்தவர் தமைப்பூ சிப்பர் உகந்தவர்க் கன்றித் தம்மோ டொத்தவர் இழிந்தோர் தம்மை அகந்தெறப் பூசை செய்வார் ஆருளார் விதியும் அற்றே மகந்தனக் கரசன் முக்கண் வள்ளலே என்னும் வேதம். 19 |
‘உலகில் எவருமே தம்மின் மிக்கோரையே பூசனை புரிவர்; உயர்ந்த
வரை அன்றித் தம்மோடொத்தவரையும் தம்மின் இழிந்தவரையும் பாவம்
அழியப் பூசை செய்வோர் ஒருவரும் இலர். நூல் வழக்கும் அதுவே யாகும்.
முக்கண் வள்ளலே வேள்விக்கு நாயகன் என்று வேதங்கூறும்.
‘உகப்பே உயர்தல்’ (தொல். உரி. 9) ஆதலின் உயர்ந்தவர் என்க.